ராகுல் டிராவிட்டின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்த புஜாரா!!

By karthikeyan VFirst Published Jan 4, 2019, 11:36 AM IST
Highlights

ராகுல் டிராவிட்டின் 15 ஆண்டுகால சாதனையை நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் முறியடித்துள்ளார் புஜாரா. 
 

ராகுல் டிராவிட்டின் 15 ஆண்டுகால சாதனையை நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் முறியடித்துள்ளார் புஜாரா. 

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், இந்திய அணியின் பெருஞ்சுவர் என அழைக்கப்பட்டவர். பல இக்கட்டான சூழல்களில் களத்தில் நங்கூரம் போட்டு சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். அவரது இடத்தை அவருக்கு பிறகு யாரும் நிரப்பவில்லை, யாராலும் நிரப்ப முடியாது என்றாலும், அவருக்கு பிறகு இந்திய அணியில் அதுபோன்றதொரு பேட்டிங்கை ஆடி இந்திய அணியை காப்பவர் புஜாரா.

டிராவிட்டுக்கும் அவருக்கு அடுத்து அவர் இறங்கிய மூன்றாம் வரிசையில் இறங்கி ஓரளவுக்கு அவர் இல்லாத குறையை தீர்த்த புஜாராவுக்கும் இடையே நிறைய சம்பவங்கள் ஒரே மாதிரியாக நடந்துவருகின்றன. இருவருக்கும் இடையே இருந்த ஒற்றுமைகள் குறித்து ஏற்கனவே நமது ஏசியாநெட் தமிழ் தளத்தில் ஒரு கட்டுரை பதிவிட்டிருந்தோம். 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் தொடரில் டிராவிட்டின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார் புஜாரா. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் மற்றும் மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் ஆகிய இரண்டு போட்டிகளிலும் சதமடித்த புஜாரா, சிட்னி டெஸ்டிலும் சதமடித்தார். இந்த தொடரில் மட்டும் மூன்று சதங்களை விளாசியுள்ளார் புஜாரா.

சிட்னியில் நடந்துவரும் போட்டியில் அபாரமாக ஆடிய புஜாரா, 373 பந்துகளில் 193 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இரட்டை சதத்தை நூழிலையில் தவறவிட்டார். இந்த தொடரில் புஜாரா 1258 பந்துகளை எதிர்கொண்டு ஆடியுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா படைத்துள்ளார். முன்னதாக 2003-2004ம் ஆண்டுகளில் 4 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய தொடரில் ராகுல் டிராவிட் 1203 பந்துகளை எதிர்கொண்டதுதான் சாதனையாக இருந்தது. தற்போது அதை புஜாரா முறியடித்துள்ளார்.
 

click me!