தோனி கூட செய்யாத சம்பவம்.. ஆஸ்திரேலியாவில் சாதனை சதமடித்த ரிஷப் பண்ட்!! இமாலய ஸ்கோரை எட்டிய இந்தியா

By karthikeyan VFirst Published Jan 4, 2019, 10:42 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. முதல் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்களை குவித்திருந்தது. புஜாரா 18வது சதத்தை பூர்த்தி செய்து களத்தில் இருந்தார். புஜாராவுடன் ஹனுமா விஹாரி 39 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இன்றைய ஆட்டத்தில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து 42 ரன்களில் நாதன் லயன் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு புஜாராவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப்புடனும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய புஜாரா, இரட்டை சதத்தை நெருங்கினார். இரட்டை சதம் அடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உணவு இடைவேளைக்கு பிறகு 193 ரன்களில் லயனின் சுழலில் சிக்கி, இரட்டை சதத்தை தவறவிட்டார் புஜாரா. 

புஜாரா அவுட்டானாலும் அவர் விட்டுச்சென்ற பணியை செவ்வனே தொடர்ந்தார் ரிஷப் பண்ட். அரைசதம் கடந்த ரிஷப் பண்ட், சதத்தை நோக்கி ஆடிவருகிறார். ரிஷப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஜடேஜாவும் சிறப்பாக ஆடிவருகிறார். இந்த ஜோடி விரைவாக ரன்களை குவித்து வருகிறது. இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் டீ பிரேக்கிற்கு பிறகு ரிஷப் பண்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரது 2வது சர்வதேச சதமாகும். முதல் சதத்தை இங்கிலாந்தில் அடித்தார். இந்த சதத்தின் மூலம் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் ரிஷப் பண்ட். ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்தில் சதமடித்த முதல் விக்கெட் கீப்பரும் ரிஷப் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி கூட இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சதமடித்ததில்லை. 

ரிஷப் பண்ட் சதத்திற்கு பிறகும் தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார். ஜடேஜாவும் அரைசதம் அடிக்க உள்ளார். 6 விக்கெட் இழப்பிற்கு 540 ரன்களை கடந்து இந்திய அணி ஆடிவருகிறது. 
 

click me!