
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 73-வது ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றிக் கண்டது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 73-வது ஆட்டம் அரியாணா மாநிலம் சோன்பட்டில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தங்களின் முதல் ரைடின் மூலம் தலா ஒரு புள்ளியைப் பெற்றன. 4-வது நிமிடத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் வீரர் நிலேஷ் சலுங்கே இரு புள்ளிகளைப் பெற, இரு அணிகளும் 4-4 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு டேக்கிள் மூலம் இரு புள்ளிகள் கிடைக்க, அந்த அணி 6-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் 10 நிமிடங்களின் முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
13-வது நிமிடத்தில் இரு அணிகளும் 9-9 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இப்படி முன்னேற்றமும் சமனிலையும் மாறி மாறி வந்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்கின.
பிறகு பெங்கால் அணியை ஆல் அவுட்டாக்கிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 15-12 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே மூன்று புள்ளிகளைக் பெற்ற பெங்கால் வாரியர்ஸ் அணி, ஸ்கோரை சமன் செய்தது. ஆனால் 25-வது நிமிடத்தில் 18-16 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலைப் பெற்றது தெலுங்கு டைட்டன்ஸ்.
தொடர்ந்து அபாரமாக ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி, நிலேஷ் சலுங்கேவின் சூப்பர் ரைடால் 32-வது நிமிடத்தில் 27-19 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு பெங்கால் வாரியர்ஸ் அணியை இரண்டாவது முறையாக ஆல் அவுட்டாக்கிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30-20 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
கடைசிக் கட்டத்தில் அபாரமாக ஆடிய பெங்கால் வாரியர்ஸ் தொடர்ச்சியாக ஐந்து புள்ளிகளைப் பெற, இரு அணிகள் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 25-30 என்ற நிலையில் இருந்தது.
தொடர்ந்து ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு, கடைசி விநாடியில் குன் லீ ஒரு புள்ளியைப் பெற்றுத்தர, அந்த அணி 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றது.
இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்கால் அணி 7-வது வெற்றியைப் பெற்றுள்ளது.
இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள தெலுங்கு டைட்டன்ஸ் அணி 10-வது தோல்வியைச் சந்தித்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.