
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 94-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 35-34 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி அசுர வெற்றி பெற்றது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 94-வது ஆட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் வீரர் பிரபஞ்சன் சூப்பர் ரைடு மூலம் மூன்று புள்ளிகளைக் கைப்பற்ற, அந்த அணி 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பிறகு சச்சினின் அபார ரைடால் 6-வது நிமிடத்தில் 6-5 என முன்னிலப் பெற்றது குஜராத். முழுமையாக ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி 11-வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸை ஆல் ஔட்டாக்கி 13-6 என்ற கணக்கில் வலுவான முன்னிலையை எட்டியது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 20-13 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் தொடர்ந்து அபாரமாக ஆடிய குஜராத் அணி, 25-வது நிமிடத்தில் 2-வது முறையாக தமிழ் தலைவாஸை ஆல் ஔட்டாக்கியதால் குஜராத் அணி 27-15 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
30-வது நிமிடத்தின் முடிவில் குஜராத் அணி 30-20 என்ற கணக்கில் முன்னிலை பெற, அந்த அணி வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி ஐந்து நிமிடங்களில் அசுர வேகத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி சரிவிலிருந்து மீண்டு 38-வது நிமிடத்தில் 28-34 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.
கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி 31-34 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. ஆனால், மனம் தளராத கேப்டன் அஜய் தாக்குர் தனது அபார ரைடால் மூன்று புள்ளிகளைக் கைப்பற்ற, தமிழ் தலைவாஸ் அணி 35-34 என்ற கணக்கில் அசுர வெற்றி பெற்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.