இவருதான் அடுத்த சச்சின்.. பிரித்வியை புகழ்ந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான்

First Published May 4, 2018, 11:16 AM IST
Highlights
prithvi shaw batting style similar to sachin said mark waugh


டெல்லி அணியில் ஆடும் இந்திய இளம் வீரர் பிரித்வி ஷாவின் பேட்டிங் உத்தி, சச்சினை போன்று உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹ் புகழ்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டும் விதமான பல இளம் வீரர்கள் உருவெடுத்துள்ளனர். அவர்களின் ஆட்டம் மிரட்சியை ஏற்படுத்துகிறது. டெல்லி அணியில் பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகிய வீரர்கள் சிறப்பாக ஆடிவருகின்றனர்.

டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்துவருகிறார். அசாதாரணமான ஷாட்களால் எதிரணியை மிரட்டுவதோடு, பல ஜாம்பவான்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்றுவருகிறார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலக கோப்பையை பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி, அண்மையில் வென்றது. உலக கோப்பை தொடர் முழுதும் பிரித்வி ஷா சிறப்பாக ஆடினார். 

இந்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் பிரித்வி ஷாவை டெல்லி அணி, 1.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. முதல் 4 போட்டிகளில் களமிறக்கப்படாத பிரித்வி ஷா, ஐந்தாவது போட்டியில்தான் களமிறக்கப்பட்டார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய பிரித்வி, டெல்லி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்து, தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

18 வயதே நிரம்பிய இளம் பிரித்வியின் திறமை அபாரமானது. இந்த ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 140 ரன்கள் எடுத்துள்ளார் பிரித்வி. இவரது ரன்கள் டெல்லி அணிக்கு பெரிய பங்காற்றியிருக்கிறது. 

பிரித்வி ஷா ஆடும் ஷாட்கள் மற்றும் அவரது பேட்டிங் உத்தியை பார்த்து பல ஜாம்பவான்கள், அவரை அடுத்த சச்சின் என வர்ணித்துவருகின்றனர். 

பந்துகளுக்கு ஏற்றவாறு கால்களை நகர்த்தி, ஃப்ரண்ட் ஃபூட் ஷாட், பேக் ஃபூட் ஷாட்களை பிரித்வி சிறப்பாக ஆடுகிறார். ஷார்ட் பிட்ச் பந்துகளை மிக நேர்த்தியாக விளாசுகிறார். இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கையாக திகழ்கிறார் பிரித்வி ஷா.

இந்நிலையில், பிரித்வி ஷாவின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹ், பிரித்வி ஷாவின் பேட்டிங் உத்திதான், அவரை பார்த்தவுடன் நமது கவனத்தை ஈர்க்கிறது. பிரித்வியின் பேட்டிங் உத்தி, சச்சினின் பேட்டின் உத்திபோல் இருப்பதை கவனிக்க முடிகிறது.

பிரித்வி பேட்டை பிடிக்கும் விதம், கிரீசில் ஆடாமல் அசையாமல் நேராக நிமிர்ந்து நிற்பது, அனைத்து விதமான ஷாட்களையும் ஆடுவது ஆகியவை பெருமளவு சச்சினை நினைவுபடுத்துகிறது. மேலும் பந்துகளை வரவிட்டு ஆடுகிறார். அடித்து ஆடும்போது பந்துகளை பஞ்ச் செய்கிறார். அவரது அடிப்படை பேட்டிங் உத்தி எந்த பவுலரையும் எந்த ஒரு ஷாட்டையும் இவரால் ஆடமுடியும் என்பது போல் உள்ளது. பெருமளவு சச்சின் டெண்டுல்கர் போலவே ஆடுகிறார் என மார்க் வாஹ் புகழ்ந்துள்ளார்.

தற்போது நடந்துவரும் ஐபிஎல் 11வது சீசனில் மார்க் வாஹ் வர்ணனையாளராக உள்ளார்.
 

click me!