தோனிக்கு வாழ்க்கை கொடுத்ததே நாங்கதான்.. பார்திவ் படேல் அதிரடி

First Published Jun 24, 2018, 2:20 PM IST
Highlights
parthiv patel revealed his opinion about dhoni getting chance in indian team


தன்னாலும் தினேஷ் கார்த்திக்காலும் தான் தோனிக்கு இந்திய அணியில் இடம் கிடைத்ததாக பார்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார் தோனி. விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இந்திய அணியில் கடந்த 2004ம் ஆண்டு அறிமுகமாகி தனது திறமையாலும் கடும் உழைப்பாலும் அணியின் கேப்டனானார். இந்திய அணிக்கு மூன்று விதமான சாம்பியன்ஷிப்பையும் வென்று கொடுத்த தோனி, கேப்டன் பதவியிலிருந்து விலகி அணியில் ஆடிவருகிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனிக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது. 

தோனியின் வளர்ச்சி சாதாரணமானதல்ல. அவரது திறமையாலும் கடும் உழைப்பாலும் கிடைத்தது. தோனி இந்திய அணியில் அறிமுகமான காலக்கட்டத்தில் பார்திவ் படேல், தினேஷ் கார்த்திக் போன்ற விக்கெட் கீப்பர்கள் இருந்தார்கள். எனினும் அவர்கள் தங்களை நிரூபிக்க தவறிவிட்டனர். ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட தோனி, அணியில் நிரந்தர இடம் பிடித்தார். படிப்படியாக வளர்ந்து இன்று, இந்திய அணியின் மாபெரும் சக்தியாக திகழ்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடிவருகிறார். தோனி அணியிலிருந்து விலகினால் தான் மற்ற விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு என்ற நிலைதான் தற்போது உள்ளது. தற்போதும் கூட தோனி விலகிய பிறகு இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் என திறமையான வீரர்கள் வரிசைகட்டி நிற்பதால், தோனியிடம் வாய்ப்பை இழந்த வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.

தோனி கிரிக்கெட்டிற்குள் நுழைந்த காலத்தில் அவருக்கு போட்டியாக இருந்து வாய்ப்பை இழந்தவர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். இதுதொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்திருந்த தினேஷ் கார்த்திக், எனது வாய்ப்பை சாதாரண ஒரு ஆளிடம் நான் இழக்கவில்லை. தோனி என்ற சிறந்த வீரரிடமே இழந்துள்ளேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

இந்நிலையில் பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்திவ் படேல், இதுதொடர்பாக பேசும்போது, தோனியிடம் நான் வாய்ப்பை இழந்ததால், நான் பிறந்த ஆண்டு சரியில்லை என சிலர் கூறுகிறார்கள். சில ஆண்டுகள் முன்போ அல்லது சில ஆண்டுகள் பின்னரோ நான் பிறந்திருந்தால் இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கும் என்று கூறுகிறார்கள்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான், தினேஷ் கார்த்திக் ஆகியோரெல்லாம் தோனிக்கு முன்னரே கிரிக்கெட் விளையாடி பயிற்சி பெற்றவர்கள். ஆனால் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி எங்களது திறமையை நிரூபிக்க தவறிவிட்டோம். அதனால்தான் தோனிக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் தோனி திறமையை நிரூபித்து, அணியில் நிரந்தர இடம்பிடித்தார். நாங்கள் நன்றாக விளையாடி இருந்தால், தோனியால் முதலிடத்தை பிடித்திருக்க முடியாது. தோனி சிறந்த வீரர், ஜாம்பவான். தோனி அளவுக்கு நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதுதான் உண்மை. தோனியின் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம். நாங்கள் இல்லாமல் தோனியின் வெற்றி இல்லை என பார்திவ் படேல் தெரிவித்தார். 

click me!