மெர்சல் காட்டும் இந்தியா.. மிரண்டுபோன பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Sep 23, 2018, 6:38 PM IST
Highlights

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், தொடக்கம் முதலே ரன் எடுக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 
 

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், தொடக்கம் முதலே ரன் எடுக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபகார் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே தொடக்கம் முதலே ரன் எடுக்க முடியாமல் திணறினர். புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் அருமையாக பந்துவீசி நெருக்கடி கொடுத்தனர். இமாமும் ஜமானும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் ரன் எடுக்க முடியாமல் திணறினாலும் விக்கெட்டை விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். அதை அவர்களின் ஆட்டத்தின் மூலமே அறியமுடிந்தது. 

முதல் 7 ஓவர்கள் முடிவில் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். அந்த நேரத்தில் 8வது ஓவரை வீச வேண்டிய பும்ராவை நிறுத்திவிட்டு ஸ்பின் பவுலர் சாஹலை அழைத்தார் கேப்டன் ரோஹித். ரோஹித்தின் வியூகத்திற்கு பலன் கிடைத்தது. 

சாஹல் வீசிய 8வது ஓவரின் கடைசி பந்து இமாமின் கால்காப்பில் பட்டது. இந்திய வீரர்கள் அம்பயரிடம் அப்பீல் செய்தனர். ஆனால் அம்பயர் அவுட் தர மறுக்க, தோனியின் அனுமதியுடன் ரிவியூ கேட்கப்பட்டது. ரிவியூவில் இமாம் அவுட்டானது உறுதியானது. சாஹல் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார். 

அதன்பிறகு அதிரடியாக ஆட தொடங்கிய ஃபகார் ஜமானை 31 ரன்களில் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். பின்னர் பாபர் அசாமுடன் கேப்டன் சர்ஃப்ராஸ் ஜோடி சேர்ந்தார். 16வது ஓவரின் 5வது பந்தை சர்ஃப்ராஸ் அடிக்க, பாபர் அசாம் ரன் ஓடினார். பாபர் பாதி தூரம் ஓடிவந்ததும் சர்ஃபராஸ் வேண்டாமென்று மறுக்க, திரும்ப ஓடமுடியாமல் ரன் அவுட்டாகிவிட்டார். சாஹல் வீசிய பந்தை எந்தவித தவறும் செய்துவிடாமல் பிடித்து ஜடேஜா ரன் அவுட் செய்துவிட்டார். 

ரன்னும் சேர்க்க முடியாமல் மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறிவருகிறது. இதுவரை இந்திய அணியின் கை ஓங்கியே இருக்கிறது. சர்ஃபராஸ் அகமதும் அனுபவ வீரர் ஷோயப் மாலிக்கும் இணைந்து ஆடிவருகின்றனர். 22 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. இந்திய அணியின் பவுலிங்கில் ரன் எடுக்க முடியாமல் ஏற்கனவே பாகிஸ்தான் திணறிவரும் நிலையில், இந்திய அணியின் ஃபீல்டிங்கும் அருமையாக உள்ளதால், ஒவ்வொரு ரன்னையும் பாகிஸ்தான் போராடியே எடுக்க வேண்டியிருக்கிறது. 
 

click me!