சூதாட்டப் புகாரில் பாகிஸ்தான் வீரர் முகமது இர்ஃபான் இடைநீக்கம்…

First Published Mar 15, 2017, 11:49 AM IST
Highlights
Pakistan batsman Mohammad Irfan suspension of fixing


பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு முகவருடன் தொடர்பில் இருந்தார் என்ற புகாரின் அடிப்படையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்ஃபான் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

“பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிகளின் கீழ், முகமது இர்ஃபான் மீது இரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அவருக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த 14 நாள்களுக்கு உள்ளாக அவர் தனது பதிலை தெரிவிக்க வேண்டும். சூதாட்ட புகார் காரணமாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சூதாட்டப் புகார் காரணமாக ஏற்கெனவே அந்நாட்டைச் சேர்ந்த இரு வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், முகமது இர்ஃபான் 3-ஆவது நபராக அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

முன்னதாக, பேட்ஸ்மேன்களான ஷர்ஜீல் கான், காலித் லத்தீஃப் ஆகியோர் துபையில் பிஎஸ்எல் தொடங்கிய 2-ஆவது நாளே போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களும் தற்போது இடைநீக்கத்தில் உள்ளனர்.

சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக எந்தவொரு பலனையும் பெறவில்லை என்றும், சூதாட்ட அழைப்பு குறித்து கிரிக்கெட் வாரியத்திடம் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ள முகமது இர்ஃபான், தனது தாயின் மரணம் காரணமாக கடந்த 3 மாதங்களாக மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அந்த மூவர் மீதான சூதாட்ட புகாரை விசாரிக்க தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் கிரிக்கெட் விளையாட அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கான் கூறியுள்ளார்.

tags
click me!