Exclusive: வீரர்களின் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது? வெற்றி முக்கியம்;அதுமட்டுமே முக்கியமல்ல- அபினவ் பிந்த்ரா

By Asianet TamilFirst Published Jul 1, 2022, 6:18 PM IST
Highlights

ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ரா, ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கிற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

உலகின் கடினமான விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவாகும். ஆனால் இந்த தனிச்சிறப்பைப் பெறுபவர்கள் ஒரு சிலரே. தனிநபர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா அத்தகைய வெகுசில வீரர்களில் ஒருவர். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்தவர் அபினவ் பிந்த்ரா. 

ஏசியாநெட் நியூஸின் ஜார்ஜ் மற்றும் ஆயுஷ் குப்தா ஆகியோர் ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ராவிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர்.  அனைத்து கேள்விகளுக்கு முகம் சுழிக்காமல் பதிலளித்தார் அபினவ் பிந்த்ரா. அந்த உரையாடலின் சிறப்பம்சங்கள் இதோ..

நச்சு கலாச்சாரத்தை எவ்வாறு தவிர்ப்பது? 

விளையாட்டில் உள்ள நச்சு கலாச்சாரம் பற்றி கேட்டதற்கு பதிலளித்த​அபினவ் பிந்த்ரா, இது உண்மைதான். இதில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் மட்டுமல்ல; ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பும் சம்பந்தப்பட்டிருக்கிறது. தோற்கும்போதும் வெற்றிபெறும்போதும் மிகையாக எதிர்வினையாற்றுபவர்கள், ஊடகங்களும் ஈடுபட்டுள்ளன. 

இதையும் படிங்க - ENG vs IND: ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு..!

நாம் வெற்றி பெற்றாலும் தோல்வியடையும் போதும் ஒரே வழியில் செயல்படுவோம். விளையாட்டு பற்றிய புரிதல் வேண்டும். களத்தில் வெற்றி பெறுவது முக்கியம் ஆனால் தோல்வி என்பது குற்றமல்ல. நச்சுக் கலாச்சாரத்தைப் பற்றி பேசும்போது, ​​அது வெற்றியை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. ஆனால் அது நிரந்தரமானது அல்ல.

விளையாட்டு வீரர்களின் அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது?

விளையாட்டு வீரர்களின் மன அழுத்தம், மனவலிமையை பேணிக்காப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அபினவ் பிந்த்ரா, விளையாட்டு வீரர்களை சூப்பர்ஹியூமன்களை போல வெளியிலிருந்து பார்க்கிறார்கள். விளையாட்டு வீரர்கள் வெற்றி, பயிற்சி என மனரீதியாக பல அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். இவற்றை முறையாக கையாளவில்லை என்றால், அது மனதளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். 

இதையும் படிங்க - ENG vs IND: பும்ராவிற்கு பதில் அவரைத்தான் கேப்டனாக நியமித்திருக்கணும்..! முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான் கருத்து

உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டிலும் விளையாட்டு வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும். நிறைய வீரர்களுக்கு விளையாட்டை விட்டு வெளியே வருவதே பெரும் சவால். விளையாட்டு வீரர்களின் வெற்றிகளை பெரிதாக கொண்டாடுவதன் மூலம், அவர்கள் மீது அடுத்தடுத்த வெற்றிகளுக்கான அழுத்தத்தை போடுகின்றனர். அவர்களும் மனிதர்கள் தான் என்பதை உணரவேண்டும். தொடர்ச்சியான வெற்றிகள் யாருக்குமே சாத்தியமில்லாதது. தடகள வீரர்களும் தனிமனிதர்கள் என்பதை உணர்ந்து, அவர்களது மறுபக்கத்திற்கும் மதிப்பளிப்பதன் மூலம் மட்டுமே வீரர்களின் மனோபலத்தையும் மனவலிமையும் பாதுகாக்க முடியும்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் சோபிக்காதது ஏன்?

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் சோபிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அபினவ் பிந்த்ரா, அழுத்தம் தான் முக்கிய காரணம். அழுத்தம், நெருக்கடிக்கு ஆட்படும்போது யாருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. நமது துப்பாக்கி சுடுதல் வீரர்கள் டோக்கியோவில் ஜெயிக்கவில்லை. ஆனால் அதைக்கடந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும். 

விளையாட்டு மேம்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த ஒலிம்பிக்கிற்கு தயாராக வேண்டும். பயிற்சி மற்றும் முன் தயாரிப்புகளில் சில தவறுகளை செய்திருக்கலாம். டோக்கியோ ஒலிம்பிக் கண்டிப்பாக அவர்களுக்கு, இது சாதாரண விளையாட்டு போட்டி கிடையாது என்பதை உணர்த்தியிருக்கும். ஒலிம்பிக் மாதிரியான தலைசிறந்த விளையாட்டு போட்டியில் ஆடும்போது கண்டிப்பாக அழுத்தம் அதிகமாக இருக்கும். அந்த அழுத்தத்தையும் மீறி, அழுத்தங்களை சிறப்பாக கையாண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.
 

click me!