தனி ஆளாக போராடி இந்தியாவை மீட்ட நிதிஷ் குமார் ரெட்டி; 'கன்னி' சதம் விளாசி சாதனை; கைகொடுத்த தமிழர்!

By Rayar r  |  First Published Dec 28, 2024, 11:53 AM IST

இந்திய அணியை தனி ஆளாக மீட்ட நிதிஷ் குமார் ரெட்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசினார். வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்தார். 


இந்தியா ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் 

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 'பாக்சிங் டே டெஸ்ட்' எனப்படும் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டீவ் ஸ்மித் அதிரடி சதம் (140 ரன்கள்) விளாசினார். பும்ரா 4 விக்கெடுகள் சாய்த்தார். பின்பு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 165 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

Tap to resize

Latest Videos

undefined

இன்று 3ம் நாள் ஆட்டம் நடந்து வரும் நிலையில், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் (28 ரன்) போலண்ட் பந்தில் லயனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பண்ட் தேவையில்லாமல் ஸ்கூப் ஷாட் அடிக்க, பந்து பேட்டின் விளிம்பில்பட்டு லயனின் கைகளுக்கு சென்றது. மறுபக்கம் சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடிய ஜடேஜா (17 ரன்) லயனின் சூப்பர் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

நிதிஷ் குமார் ரெட்டியின் மேஜிக் இன்னிங்ஸ் 

இதனால் இந்திய அணி 221 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து பரிதவித்தது. ஆஸ்திரேலியாவை விட கிட்டத்தட்ட 245 ரன்கள் அணி பின் தங்கி இருந்த நிலையில், நிதிஷ் குமார் ரெட்டியும், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடினார்கள். ஸ்டார்க், கம்மின்ஸ், போலண்ட் என ஆஸ்திரேலிய பாஸ்ட் பவுலர்களின் பவுலிங்கை எளிதில் சமாளித்த நிதிஷ் குமார் ரெட்டி கவர் டிரைவ் மூலம் சூப்பரான பவுண்டரிகளை ஓடவிட்டார்.

லயன் ஓவரில் சூப்பர் சிக்சர் ஒன்றை பறக்க விட்டார். ஒருபக்கம் நிதிஷ் குமார் ரெட்டி பவுண்டரிகளாக விளாசி தனது முதல் அரை சதம் அடிக்க, மறுபக்கம் வாஷிங்டன் சுந்தர் அவருக்கு பக்கபலமாக நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.  ஸ்டார்க், கம்மின்ஸ், போலண்ட், லயன், மார்ஷ், டிராவிஸ் ஹெட் என 5 பேர் பந்துவீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. 

முதல் சதம் விளாசிய நிதிஷ்குமார் ரெட்டி

நிதிஷ்குமார் ரெட்டிக்கு துணையாக தூண் போன்று விளையாடிய வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் கிரிக்கெடில் தனது 3வது அரை சதத்தை விளாசினார். தொடர்ந்து நன்றாக விளையாடிய நிலையில் ஸ்கோர் 348 ஆக உயர்ந்தபோது வாஷிங்டன் சுந்தர் 50 ரன்னில் லயன் பந்தில் கேட்ச் ஆனார். ஆஸ்திரேலிய வீரர்களின் வேக தாக்குதலை எளிதில் சமாளித்த நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 130 ரன்களுக்கு மேல் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பும்ரா ரன் ஏதும் எடுக்காமல் கம்மின்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். அதே வேளையில் மறுமுனையில் பதற்றமின்றி அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை அடித்து வரலாற்று சாதனை படைத்தார். 170 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் தனது கன்னி சதத்தை விளாசினார். அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அணிக்கு தேவையான நேரத்தில் கைகொடுத்து சதமும் விளாசி அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார் நிதிஷ் குமார் ரெட்டி. 

இந்திய அணி 9 விக்கெட் இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட 116 ரன்கள் பின் தங்கியுள்ளது. நிதிஷ் குமார் ரெட்டி 105 ரன்களுடன், சிராஜ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தபோது மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் தடைபட்டது. ஒருகட்டத்தில் இந்தியா பாலோ ஆன் பெறுவதுபோல் இருந்த நிலையில், இளம் வீரர்கள் நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் சரிவில் இருந்து தூக்கி நிறுத்தியுள்ளனர். நாளை 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.
 

click me!