முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அபார வெற்றி…

First Published Oct 23, 2017, 8:51 AM IST
Highlights
New Zealand victory over India in first one-day cricket match


இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணியில் ஷிகர் தவன் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கோலி களத்துக்கு வர, மறுமுனையில் ரோஹித் சர்மா 20 ஓட்டங்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த கேதார் ஜாதவ் 12 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், கோலியுடன் சற்று நிலைத்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 50 ஓட்டங்கள் சேர்த்தது. கோலி 62 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அப்போது, 37 ஓட்டங்களுடன் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து வந்த தோனி நிதானமாக ஆட, மறுமுனையில் கோலி ஓட்டங்களை அள்ளினார். எனினும், 40-வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. 25 ஓட்டங்கள் அடித்திருந்த தோனி ஆட்டமிழக்க, அவரை அடுத்து வந்த ஹார்திக் பாண்டியாவும் 16 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.

இந்த நிலையில் 111 பந்துகளில் சதம் கடந்த கோலி 121 ஓட்டங்கள் எட்டி ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த புவனேஸ்வர் குமார் 26 ஓட்டங்களுக்கு கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் ஓட்டங்களின்றி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகள் எடுத்தார். டிம் செளதி 3 விக்கெட், சேன்ட்னர் ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து, ஆடத் தொடங்கிய நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர்களில் ஒருவரான காலின் மன்ரோ 28 ஓட்டங்கள் ரன்கள் எடுத்து வீழ்ந்தார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 6 ஓட்டங்களில் ஔட்டானார்.

இந்த நிலையில் கப்டில் 32 ஓட்டங்களில் வெளியேற, தொடர்ந்து வந்த லதாம், டெய்லருடன் இணைந்தார். நிலைத்து ஆடி ஸ்கோரை அதிகரித்த இந்த ஜோடி, 4-வது விக்கெட்டுக்கு 200 ஓட்டங்கள் குவித்தது.

லதாம் சதம் கடந்து நிலைக்க, டெய்லர் 95 ஓட்டங்களில் வெளியேறினார். வெற்றிக்கு ஒரு ரன் தேவை இருந்த நிலையில் களத்துக்கு வந்த ஹென்றி நிகோலஸ் பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்தார்.

லதாம் 102 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 103 ஓட்டங்களுடனும், நிகோலஸ் ஒரு பந்தில் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய தரப்பில் புவனேஸ்வர், பூம்ரா, குல்தீப், பாண்டியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

நியூஸிலாந்தின் டாம் லதாம் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய நியூஸிலாந்து 49 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 284 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

tags
click me!