
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி செம காமெடி செய்தது. ஒரே பந்தில் 5 ரன்கள் விட்டுக்கொடுத்த வீடியோ வைரலாகிவருகிறது.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து 3-0 என டி20 தொடரை பாகிஸ்தான் அனி வென்றது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றன.
இதையடுத்து மூன்றாவது போட்டி துபாயில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர் முடிவில் 279 ரன்கள் எடுத்தது. 280 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடியபோது, 7 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த போட்டி முடிவில்லாமல் முடிந்தது.
அதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸின்போது, 49வது ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஃபஹீன் அஷ்ரஃப் எதிர்கொண்டார். போல்ட் வீசிய பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் அடித்துவிட்டு அஷ்ரஃபும் ஆசிஃப் அலியும் மூன்று ரன்கள் ஓடினர். இதற்கிடையே அந்த பந்தை ஃபீல்டிங் செய்து ஃபீல்டர் வீச, அதை பிடித்த விக்கெட் கீப்பர் லதாம், ரன் அவுட் செய்ய நினைத்து பவுலரிடம் வீசினார். பந்து ஓவர்த்ரோ ஆகி செல்ல, அஷ்ரஃபும் ஆசிஃப் அலியும் நான்காவது ரன் ஓடினர். ஓவர்த்ரோ ஆகி ஓடிய பந்தை மீண்டும் ஃபீல்டர் பிடித்து விக்கெட் கீப்பரிடம் வீச, அதையும் பிடிக்காமல் கோட்டை விட்டார் விக்கெட் கீப்பர் லதாம். அந்த வாய்ப்பையும் விட்டுவைக்காத பாகிஸ்தான் வீரர்கள் ஐந்தாவது ரன்னை ஓடினர். இதனால் ஒரு பந்தில் 5 ரன்கள் கிடைத்தது.
நியூசிலாந்து வீரர்கள் செய்த செயல், சிறுவர்கள் ரோட்டில் ஆடும் கிரிக்கெட்டே பரவாயில்லை என்பதுபோல் இருந்தது. இவ்வளவு அசால்ட்டாக ஆடி, ஒரு பந்தில் ஐந்து ரன்களை விட்டுக்கொடுத்தனர். பொதுவாக ஃபீல்டிங்கில் பாகிஸ்தான் அணியே படுமோசம். மொக்கையான ஃபீல்டிங்கால் அவ்வப்போது காமெடி செய்துவிடுவர். ஆனால் அவர்களிடமே இவ்வளவு மோசமாக செயல்பட்டு அவர்களையே மிஞ்சிவிட்டனர் நியூசிலாந்து வீரர்கள்.