பலரின் கேலி கிண்டலால் காயப்பட்ட நீரஜ்.. நாட்டிற்கு தங்க பதக்கம் பெற்று தந்து சாதனை.. யார் இந்த நீரஜ்..???

By Ezhilarasan BabuFirst Published Aug 7, 2021, 6:11 PM IST
Highlights

காமன்வெல்த் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் என பல போட்டிகளில் பங்கேற்ற அவர் தொடர்ந்து தங்கப்பதக்கங்களை குவித்து வந்தார். பதக்கங்களை அவர் வாரி குவிப்பதை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. 

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல்முறையாக தடகளப்போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் இந்தியாவில் தங்கமகன் நீரஜ் சேப்ரா. 150 கோடி இந்திய மக்களின் கணவை, நீண்டநாள் ஏக்கத்தை தனது அசாதாரணமான திறமையால் நனவாக்கி நாட்டை தலைநிமிரச் செய்துள்ளார் நீரஜ். அரியானா மாநிலம், பானிபட் மாவட்டத்தில் கான்பரா கிராமத்தை சேர்ந்தவர் இவர். கடந்த 1997ல் பிறந்த நீரஜ் பள்ளி பருவத்தில் உடல் எடை அதிகமாக இருந்ததால் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். தனது 12 வயதில் 90 கிலோ உடல் எடையுடன் இருந்த ஒரு இளைஞர்தான் தடகளத்தில் இந்தியாவிற்கு தங்கம் வாங்கித் தரப் போகிறார் என்று அப்போது யாரும் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை. ஒரு கட்டத்தில் 

உடல் எடையை குறைப்பதற்காக ஈட்டி எறிதல் விளையாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், முழுவதுமாக அந்தப் பயிற்சிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என்று சொல்லும் அளவுக்கு 24 மணி நேரமும் பயிற்சி பயிற்சி என வளம் வந்தார் அவர். நாளடைவில் ஈட்டி எறிதல் அவருக்குத் தொழில் முறை விளையாட்டாகவே மாறியது. அவரும் தொழில் முறை வீரராகவே மாறினார். ஒருகட்டத்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வெற்றிகனி சுவைத்த அவர். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முறையாக தெற்காசிய விளையாட்டு இந்தியாவிற்கு தங்கம் வாங்கி பெருமைப்படுத்தினார். காமன்வெல்த் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் என பல போட்டிகளில் பங்கேற்ற அவர் தொடர்ந்து தங்கப்பதக்கங்களை குவித்து வந்தார். 

பதக்கங்களை அவர் வாரி குவிப்பதை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. " எப்போதும் அனைவரும் பதக்கம் வெல்ல வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். ஆனால் நான் எப்போது ஆடும்போதும் எனது ஆட்டத்தை அதாவது நான் துல்லியமாக ஈட்டி எறிய வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன்,  அதுவே எனது வெற்றியாக மாறி, பதக்கம் எனக்கு போனசாக கிடைக்கிறது என்றார். இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் 90 மீட்டர் அல்லது அதற்கும் கூடுதலாக ஈட்டி எறிந்து நாட்டிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தருவார் என்று ஒட்டுமொத்த தேசமும் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், இன்று இறுதிப் போட்டியின்  விளையாடி அவர், அதன் முதல் சுற்றில் 87.3 மீட்டர் தூரம் தூக்கி வீசினார். இரண்டாவது சுற்றில் 87.58 மீட்டர் தொலைவுக்கு வீசினார் .மூன்றாவது சுற்றில் 76. 79 மீட்டர் தூரத்திற்கும் வீசினார். 

ஆறு சுற்றுகளிலும் சிறப்பாக வீசினார் நீரஜ். ஆனால் இறுதிவரை எந்த நாட்டு வீரரும் அவர் இரண்டாவது சுற்றில் வீசிய 87.5 8 மீட்டர் தூரத்திற்கு வீசவில்லை, எனவே அதிக தொலைவிற்கு ஈட்டி வீசிய சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்து தங்க மகனாக சோப்ரா உயர்ந்துள்ளனர். கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பும், அவரின் தீராத லட்சிய தாகமும் அவருக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் 150 கோடி மக்களுக்கும் கௌரவத்தை தேடித் தந்திருக்கிறது என்பதே நிஜம். 

 

click me!