பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45மீ தூரம் எறிந்து 2ஆவது இடம் பிடித்து இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸீல் 33ஆவது ஒலிம்பிக் தொடரானது பரபரப்பான கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும், ஓரிரு நாட்களில் பாரிஸ் 2024 ஒலிம்பிக் நிறைவு விழா நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியிருந்த இந்தியா, ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்று 4ஆவது வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.
இந்த நிலையில் தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா தற்போது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்றார். இதில், டிரினாட் மற்றும் டொபாகோ நாட்டைச் சேர்ந்த கேஷோர்ன் வால்கார்ட் இறுதிப் போட்டியில் முதல் எறிதலை தொடங்கினார். இதில் அவர் 86.16மீ தூரம் எறிந்தார். இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்கள் பங்கேற்றனர்.
தங்கப் பதக்கத்திற்கான வாய்ப்பை இழந்து வெண்கலப் பதக்க போட்டிக்கு தகுதி பெற்ற அமன் செராவத்!
அதன் பிறகு கிரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 84.70மீ தூரமும், கென்யா நாட்டைச் சேர்ட்ந்த ஜூலியஸ் யெகோ 80.29மீ தூரம் எறிந்து 3ஆவது இடம் பிடித்திருந்திருந்தார். இதெல்லாம் ஒவ்வொரு வீரரும் தங்களது முதல் எறிதலை தொடங்கிய போது இருந்த வரிசைகள். ஆனால், நீரஜ் சோப்ரா எதிர்பாராத விதமாக முதல் எறிதலை பவுலாக வீசினார். கடைசியில் முதல் எறிதலை தொடங்கிய பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் முதல் முயற்சியிலேயே 92.97மீ தூரம் எறிந்து சாதனை படைத்தார். அதோடு, 90மீ.க்கும் அதிகமாக எறிந்த வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றார். மேலும், 92.72மீ தூரம் எறிந்திருந்த ஜூலியஸ் யெகோவின் சாதனையை முறியடித்துள்ளார்.
பின்னர் 2ஆவது முயற்சியில் நீரஜ் சோப்ரா 89.45மீ தூரம் எறிந்து 2ஆவது இடம் பிடித்தார். முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் இடம் பிடித்திருந்தார். இதற்கு முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தகுதி சுற்று போட்டியில் நீரஜ் சோப்ரா 89.34 மீ தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஜாகூப் வெட்லெஜ் 88.50மீ தூரம் எறிந்து 3ஆவது இடம் பிடித்தார்.
ஹாக்கி போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்த பிஆர் ஸ்ரீஜேஷ்: யார் இந்த ஸ்ரீஜேஷ்? சாதனைகள் என்ன?
பின்னர் மூவரும் 3ஆவது முயற்சியை மேற்கொண்டனர். நதீம் 88.72 மீ தூரம் எறிந்தார். 3ஆவது முயற்சியில் நீரஜ் சோப்ரா பவுல் ஆனார். 3 சுற்றுகள் முடிவில் குறைவான புள்ளிகள் பெற்றிருந்த 4 வீரர்கள் எலிமினேட் செய்யப்பட்டனர். பின்லாந்தின் ஆலிவர் ஹெலாண்டர் மற்றும் டோனி கெரானென், பிரேசிலின் லூயிஸ் மொரிசியோ டா சில்வா மற்றும் மால்டோவாவின் ஆன்ட்ரியன் மர்தாரே ஆகியோர் இறுதிப் போட்டியிலிருந்து வெளியேறினர்.
பின்னர் 4ஆவது சுற்று தொடங்கியது. கிரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54மீ தூரம் எறிந்து 3ஆவது இடம் பிடித்தார். இதையடுத்து வந்த நீரஜ் சோப்ரா இந்த முறையும் பவுல் ஆனார். எனினும் அவர் 2ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இதே போன்று பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் முதல் இடத்தை தக்க வைத்தார்.
ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45மீ தூரம் எறிந்து 2ஆவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் 92.97மீ தூரம் எறிந்து புதிய சாதனையை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலமாக இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் 58ஆவது இடம் பிடித்தது.