
நாகையில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாநில பீச் வாலிபால் போட்டியின் ஆடவர் பிரிவில் நாகை அணியும், மகளிர் பிரிவில் சேலம் அணியும் முதலிடம் பிடித்தன.
2016-17 முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி நாகையில் சனிக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த ஆடவர், மகளிர் அணிகள் பங்கேற்றன.
நாக் - அவுட் மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன.
சனிக்கிழமை நடைபெற்ற நாக் - அவுட் சுற்றுகளின் முடிவில் ஆடவர் பிரிவில் நாகப்பட்டினம், திண்டுக்கல், தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய அணிகள் வெற்றிப் பெற்று லீக் போட்டிக்குத் தேர்வாகின.
அதேபோன்று, மகளிர் பிரிவில் நாமக்கல், சேலம், சென்னை, ஈரோடு ஆகிய அணிகளும் வெற்றி பெற்று லீக் போட்டிக்குத் தேர்வு பெற்றன.
லீக் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஆடவர் பிரிவில் நாகை மாவட்ட அணி முதலிடத்தைப் பிடித்தது. தஞ்சாவூர் மாவட்ட அணி இரண்டாமிடத்தையும், தூத்துக்குடி மாவட்ட அணி மூன்றாமிடத்தையும் பிடித்தன.
மகளிர் பிரிவில், சேலம் மாவட்ட அணி முதலிடம் பிடித்தது. ஈரோடு மாவட்ட அணி இரண்டாமிடத்தையும், நாமக்கல் மாவட்ட அணி மூன்றாமிடத்தையும் பெற்றன.
இதன்பிறகு பரிசளிப்பு விழா நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி, வெற்றி பெற்ற அணிகளின் வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.
முதலிடம் பெற்ற அணியின் வீரர், வீராங்கனைகளுக்குத் தலா ரூபாய் ஒரு லட்சம் பரிசளிக்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற அணிகளின் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 75 ஆயிரமும், மூன்றாமிடம் பெற்ற அணிகளின் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.
இதில், நாகை மாவட்ட விளையாட்டு அலுவலர் பி.சிவா, இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழும செயலாளர் பி.எஸ். மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.