
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில், கையுந்து பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவிலும் நாகை அணி வெற்றியைக் குவித்தது.
நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற இப்போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின. இதில் கையுந்து பந்து, கால்பந்து மற்றும் கபடி ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
இதில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 கடற்கரை மாவட்டங்களிலிருந்து 260 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
திங்கள்கிழமை தொடக்க சுற்றுகளும், செவ்வாய்க்கிழமை இறுதிப் போட்டிகளும் நடைபெற்றன.
ஆண்களுக்கான கால்பந்து இறுதிப் போட்டியில் கன்னியாகுமரி - காஞ்சிபுரம் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் இரு அணிகளுமே 4-4 என்று கோல் அடித்திருந்தன.
பின்னர் டைபிரேக்கர் முறையில் 2-1 என்ற கணக்கில் கன்னியாகுமரி அணி வென்றது.
பெண்களுக்கான பிரிவில் சென்னை அணி 8-1 என்ற கோல் கணக்கில் திருவாரூர் அணியை தோற்கடித்தது.
கையுந்து பந்துக்கான ஆண்கள் பிரிவில் சென்னையை வீழ்த்தி நாகப்பட்டினம் அணி வெற்றி பெற்றது.
இதேபோல், பெண்களுக்கான பிரிவிலும் தஞ்சாவூர் அணியை வீழ்த்தி நாகை அணி வெற்றி பெற்றது.
கபடி போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் கடலூர் அணி, நாகப்பட்டினம் அணியை வீழ்த்தியது.
பெண்களுக்கான பிரிவில் தஞ்சாவூர் அணி, கன்னியாகுமரி அணியை தோற்கடித்தது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் துணை காவல் கண்காணிப்பாளர் அன்பு பங்கேற்று வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகை விளையாட்டு அலுவலர் சிவா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.