
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை அணியும் சென்னை அணியும் மோதுகின்றன. தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துவரும் மும்பை அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி இது.
இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி 5ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
6 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை அணியே ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மூன்று முறை ஐபிஎல் தொடரை வென்ற நடப்பு சாம்பியனான மும்பை அணி இந்த தொடரில் திணறிவருகிறது. இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பெரும்பாலான போட்டிகளில் கடைசி ஓவரின் கடைசி பந்து வரை எதிரணிக்கு அழுத்தம் கொடுத்து மும்பை அணி தோற்றுள்ளது.
அதற்கு நேர்மாறாக கடைசி ஓவரில் பல திரில் வெற்றிகளை ருசித்து தோனி தலைமையிலான படை வலுவான நிலையில் உள்ளது.
மும்பை அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சரியாக ஆடாததே தொடர் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. ரோஹித்தாவது பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடினார். அதிலிருந்து ரோஹித் ஃபார்மில் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தவறான ஷாட் செலக்ஷனால் அவுட்டாகி வருகிறார். ஆனால் பாண்டியாவும் பொல்லார்டும் ஃபார்மில் இல்லை. அதேநேரத்தில் சென்னை அணியில் அம்பாதி ராயுடு, தோனி ஆகிய இருவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில், வலுவான சென்னை அணியை மும்பை அணி எதிர்கொள்கிறது. அதனால் ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் பொல்லார்டுக்கு பதிலாக ஜே.பி.டுமினி அல்லது பென் கட்டிங் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றம் செய்யப்படலாம் என்பதை தோனியும் அனுமானித்திருக்க கூடும். எனினும் எந்த வீரர் களமிறக்கப்படுவார் என்பது போட்டியின்போதே தெரியவரும்.
மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கின்றனர். ரோஹித்தும் சிறப்பாக ஆடும் பட்சத்தில் அந்த அணி நல்ல ஸ்கோரை எட்டும். தொடர் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் மும்பை அணியும் வெற்றியை தொடரும் முனைப்பில் சென்னை அணியும் களமிறங்குகின்றன. எனவே இன்றைய போட்டியில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.