சூர்யகுமார், பாண்டியா பிரதர்ஸ் அதிரடி பேட்டிங்.. பஞ்சாபை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

Asianet News Tamil  
Published : May 05, 2018, 09:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
சூர்யகுமார், பாண்டியா பிரதர்ஸ் அதிரடி பேட்டிங்.. பஞ்சாபை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

சுருக்கம்

mumbai indians defeats ashwin lead punjab

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த மும்பை அணி, பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்த மும்பை அணி, எஞ்சிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில், நேற்று பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இந்தூர் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான ராகுலும் கெய்லும் வழக்கம்போலவே அதிரடியாக தொடங்கினார். ராகுல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஃபார்ம் இல்லாமல் தொடர்ந்து திணறிவரும் யுவராஜ் சிங் களமிறக்கப்பட்டார். நேற்றும் அதிரடியாக ஆடமுடியாமல் திணறினார். 14 ரன்களில் அவர் ரன் அவுட்டாகி வெளியேற, கெய்லும் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கருண் நாயர் 23 மற்றும் அக்ஸர் படேல் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால், பஞ்சாப் அணியின் ரன் வேகம் குறைந்தது. 19 ஓவருக்கு 154 ரன்கள் எடுக்கப்பட்டது. ஆனால், ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட மார்கஸ் ஸ்டோய்னிஸ், அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் உட்பட 20 ரன்கள் குவித்தார்.

20 ஓவரின் முடிவில், பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.

175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் லிவைஸ் 10 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷான் 25 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடியாக ஆடி ரன் சேர்த்து வந்த சூர்யகுமார் யாதவ், 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஹர்திக் பாண்டியாவும் ரோஹித் சர்மாவும் ஜோடி சேர்ந்து ஆடினர். இருவரும் அதிரடியாக ஆடி வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியா போல்டாகி வெளியேறினார்.

கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், குருணல் பாண்டியா ரோஹித்துடன் ஜோடி சேர்ந்தார். முஜீபுர் ரஹ்மான் வீசிய 17வது ஓவரில் ரோஹித் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். அந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது. இப்போது மூன்று ஓவருக்கு 36 ரன்கள் தேவை.

ஸ்டோய்னிஸ் வீசிய 18வது ஓவரில் குருணல் பாண்டியா, 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார். ரோஹித்தும் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட்டது.

இன்னும் இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் தேவை. 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து 6 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளி பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.  

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை அணி, எஞ்சிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும். இலக்கை எட்டவிடாமல் தடுப்பதில் வல்லமை பெற்ற பஞ்சாப் அணியிடம் இலக்கை விரைவாக எட்டி வெற்றி பெற்றிருப்பது, மும்பை அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது..

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 2வது ஓடிஐயில் ரோகித், விராட் கோலி சொதப்புவார்கள்.. ஆருடம் சொன்ன அதிரடி வீரர்!
Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி