தோனியின் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது: சிஎஸ்கே சி.இ.ஓ. தகவல்

By SG BalanFirst Published Jun 1, 2023, 10:15 PM IST
Highlights

ஐபிஎல் போட்டியில் பேட்டிங் செய்யும்போது ஓடுவதற்கு சிரமப்பட்டுவந்த தோனிக்கு மும்பையில் இன்று மூட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு வியாழன் அன்று மும்பை மருத்துவமனையில் இடது முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கிறது. இது அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவதற்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸை ஐந்தாவது ஐபிஎல் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற தோனி, திங்கள்கிழமை இறுதிப் போட்டிக்குப் பிறகு அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் பறந்து, பிசிசிஐ மருத்துவக் குழுவில் உள்ள பிரபல விளையாட்டு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டின்ஷா பர்திவாலாவிடம் ஆலோசனை நடத்தினார்

"தோனிக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் வியாழக்கிழமை வெற்றிகரமாக முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நலமாக இருக்கிறார்" என்று சிஎஸ்கே அணி சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், "காலையில் அறுவை சிகிச்சை நடந்தது. என்னிடம் விவரங்கள் இல்லை. அறுவை சிகிச்சை மற்றும் பிற விஷயங்கள் பற்றிய அனைத்து விவரங்களும் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.

"அவர் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரது விரிவான மறுவாழ்வு தொடங்குவதற்கு முன்பு அவர் சில நாட்கள் ஓய்வில் இருப்பார். அடுத்த ஐபிஎல்லில் விளையாடுவதற்கு அவருக்கு போதுமான நேரம் கிடைக்கும் என்று இப்போது எதிர்பார்க்கப்படுகிறது" என அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் தோனி தனது இடது முழங்காலில் வலியுடன் விளையாடினார். விக்கெட் கீப்பிங்கின் போது சிரமம் ஏதும் இல்லாமல் இருந்த அவர், பேட்டிங்கில் சில சமயங்களில் 8வது வீரராகத்தான் களம் இறங்கினார்.

ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பிறகு பேசிய தோனி, "ஓய்வு அறிவிப்பதற்கு இதுவே சிறந்த நேரம். நன்றி மற்றும் ஓய்வு பெறுகிறேன் என்று சொல்வது எளிதான விஷயம். ஆனால் இன்னும் ஒரு ஐபிஎல் சீசனில் விளையாட ஒன்பது மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது கடினமான விஷயம். அதற்கு உடல் தாங்க வேண்டும். ஆனால் சிஎஸ்கே ரசிகர்களிடம் இருந்து நான் பெற்ற அன்பிற்காக நான் இன்னுனொரு சீசனில் விளையாடுவது அவர்களுக்கான பரிசாக இருக்கும்" என்றார்.

click me!