
Mirabai Chanu Wins Gold at Commonwealth Weightlifting 2025! அகமதாபாத்தில் நடந்த காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு மொத்தம் 193 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 108 கிலோ எடையும் தூக்கினார். இதன் மூலம் அவர் மொத்தமாக 193 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்
49 கிலோ எடைப் பிரிவில் நடந்த இந்த போட்டியில், மீராபாய் சானு மிக எளிதாக வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தார். 31 வயதான மீராபாய் சானு கடந்த ஆகஸ்ட் மாதம் பாரிஸ் விளையாட்டுப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்த பிறகு முதன்முறையாக காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். இப்போது அதில் வெற்றிக்கனியை பறித்துள்ளார்.
யார் இந்த மீரா பாய் சானு?
தங்கம் வென்ற மீரா பாய் சானு, மணிப்பூரில் உள்ள இம்பாலுக்கு அருகில் உள்ள நாங்போக் காக்சிங் என்ற கிராமத்தில் 1994ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தனது இளமைக்காலத்தில் அதிகமாக விறகுக் கட்டைகளை சுமந்ததால் அது உடல்திறனை நன்கு வலுப்படுத்தி பின்னாளில் பளுதூக்குதலுக்கு பெரும் பங்காற்றியுள்ளது. 2014 காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சர்வதேச அரங்கில் கால் பதித்த மீரா பாய் சானு, 2017ல் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அந்த போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
பளுதூக்குதலில் பெரும் சாதனை
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானு, கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 2வது இந்திய பளுதூக்கும் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 2022ல் காமன்வெல்த் போட்டிகளில் 49 கிலோ பிரிவில் மொத்தம் 201 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த இரும்பு பெண்மணி மீரா பாய் சானு, இப்போது மீண்டும் தங்கத்தை தட்டித் தூக்கி சாதனை படைத்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.