
Australia Epic Comeback: 3 Centuries & 431 Runs Record Win! தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 431 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளது. பின்பு ஆடிய தென்னாப்பிரிக்கா 155 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், கேப்டன் மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன் ஆகியோரின் அதிரடி சதங்களால் 50 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 431 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் 142 ரன்கள் எடுத்தார். மிட்செல் மார்ஷ் 106 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியாவில் 3 பேர் சதம்
55 பந்துகளில் 118 ரன்கள் எடுத்த கேமரூன் கிரீன் தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார் மேலும் ஆஸ்திரேலிய வீரரின் இரண்டாவது வேகமான ஒருநாள் சதம் என்ற சாதனையையும் படைத்தார். 118 ரன்கள் எடுத்த கிரீனுடன் 50 ரன்களுடன் அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட்-மிட்செல் மார்ஷ் ஜோடி 34.1 ஓவர்களில் 250 ரன்கள் சேர்த்தது. பின்னர் சதம் அடித்த மார்ஷும் வெளியேறினார். ஆனால் கிரீனும் கேரியும் இணைந்து ஆட்டமிழக்காமல் மூன்றாவது விக்கெட்டுக்கு 82 பந்துகளில் 164 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவை மிகப்பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றனர்.
கேமரூன் கிரீன் சாதனை
கேமரூன் கிரீன் எட்டு சிக்ஸர்களும் ஆறு பவுண்டரிகளும் அடித்தார், டிராவிஸ் ஹெட் 17 பவுண்டரிகளும் ஐந்து சிக்ஸர்களும் அடித்து 103 பந்துகளில் 142 ரன்கள் எடுத்தார். மிட்செல் மார்ஷ் ஆறு பவுண்டரிகளும் ஐந்து சிக்ஸர்களும் அடித்து 100 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 47 பந்துகளில் முதல் ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்த கிரீன், ஆஸ்திரேலிய வீரரின் இரண்டாவது வேகமான சதம் என்ற சாதனையையும் படைத்தார்.
ஆஸ்திரேலியாவின் அரிய சாதனை
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய் அணி மற்றொரு அரிய சாதனையையும் படைத்தது. அதாவது அந்த அணி ஒருநாள் போட்டிகளில் 3 வீரர்கள் சதம் அடித்த அரிய சாதனையை படைத்துள்ளது. வரலாற்றில் 4897 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது முறையாக மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியது. தற்செயலாக, 2015 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்த மைல்கல்லை எட்டிய முதல் அணி தென்னாப்பிரிக்கா ஆகும். தொடக்க ஆட்டக்காரர்களான ஹஷிம் அம்லா (153*) மற்றும் ரிலீ ரோசோவ் (128) மற்றும் அதிரடி வீரர் ஏபி டில்லியர்ஸ் (149) ஆகியோர் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா தோல்வி
இந்த போட்டியில் 432 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க அணி வெறும் 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனாலும் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றிருந்த தென்னாப்பிரிக்கா தொடரை கைப்பற்றியது.