ரிஷப் பண்ட் பண்ணது சரியா? தவறா? முட்டி மோதிய கவாஸ்கர் - மைக்கேல் கிளார்க்

By karthikeyan VFirst Published Dec 10, 2018, 2:02 PM IST
Highlights

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸை ஸ்லெட்ஜிங் செய்த விஷயத்தில் கவாஸ்கர் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து முரண் ஏற்பட்டது. 
 

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸை ஸ்லெட்ஜிங் செய்த விஷயத்தில் கவாஸ்கர் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து முரண் ஏற்பட்டது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தீவிரமாக ஸ்லெட்ஜிங் செய்தார். பொதுவாக ஆஸ்திரேலிய வீரர்கள் தான் எதிரணி வீரர்களை அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்வார்கள். ஆனால் இந்த போட்டியில் அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் செயல்பட்டார் ரிஷப் பண்ட்.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், ரிஷப் பண்ட்டை நோக்கி சில வார்த்தைகளை உதிர்த்தார். ஆனால் அதை ரிஷப் பண்ட் கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது, அந்த அணியின் நட்சத்திர வீரர் கவாஜாவை சீண்டினார் ரிஷப் பண்ட். எல்லாரும் புஜாரா ஆகிவிட முடியாது என்று கவாஜாவிடம் தெரிவித்து சீண்டிவிட்டார் ரிஷப்.

பின்னர் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது, கம்மின்ஸை சீண்டினார் ரிஷப். தோல்வியை தவிர்க்க போராடிக்கொண்டிருந்த கம்மின்ஸிடம், இங்கு பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதல்ல என்று சீண்டினார். 

ரிஷப் பண்ட் கூறியது ஸ்டம்பில் இருக்கும் மைக்கின் வாயிலாக நன்றாக கேட்டது. அதைக்கேட்ட வர்ணனையாளர்கள் கவாஸ்கர் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகிய இருவரும் விவாதித்தனர். அப்போது ரிஷப் பண்ட்டின் செயலை விமர்சித்த கவாஸ்கரின் கருத்திலிருந்து மைக்கேல் கிளார்க் முரண்பட்டு, பண்ட்டின் செயலுக்கு ஆதரவு தெரிவித்தார். 

ரிஷப் பண்ட் கம்மின்ஸை ஸ்லெட்ஜிங் செய்தது குறித்து கருத்து தெரிவித்த கவாஸ்கர், பண்ட் கம்மின்ஸிடம் நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. உங்கள் அணி பவுலரை உத்வேகப்படுத்தலாம். ஆனால் நேரடியாக பேட்ஸ்மேனை சீண்டுவது என்பது சரியான செயல் அல்ல. அதுவும் எதிரணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளரை ஸ்லெட்ஜிங் செய்வது நல்லதல்ல. அதுவும் அடுத்த போட்டியை பெர்த்தில் வைத்துக்கொண்டு கம்மின்ஸை சீண்டியது நல்லதல்ல என்றே கருதுகிறேன் என்றார் கவாஸ்கர். 

கவாஸ்கரின் கருத்தை மறுத்த மைக்கேல் கிளார்க், ரிஷப் பண்ட் ஸ்லெட்ஜிங் செய்தது சரிதான் என்றார். கவாஸ்கர் கருத்தை மறுத்து பேசிய மைக்கேல் கிளார்க், ரிஷப் பண்ட் ஸ்லெட்ஜிங் செய்தது சரிதான். பேட்ஸ்மேனுக்கு அவர் பேட்டிங் ஆடும் சூழலை அசவுகரியமாக மாற்றும் செயல்தான் அது. அந்த வகையில் அவரது செயல் தவறானது அல்ல. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல்லில் டெல்லி அணியில் இருவரும் ஆடியுள்ளதால் இருவருக்கும் இடையே பழக்கம் இருக்கும் என்ற வகையில் இது தவறல்ல என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்தார். 
 

click me!