மீண்டும் ஒருமுறை திறமையை நிரூபித்த மயன்க்!! அகர்வாலின் அதிரடி சதத்தால் இந்தியா பி அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Aug 26, 2018, 11:20 AM IST
Highlights

மயன்க் அகர்வாலின் அதிரடி சதத்தால் இந்தியா ஏ அணியை வீழ்த்தி பி அணி அபார வெற்றி பெற்றது. 
 

மயன்க் அகர்வாலின் அதிரடி சதத்தால் இந்தியா ஏ அணியை வீழ்த்தி பி அணி அபார வெற்றி பெற்றது. 

இந்தியா ஏ, இந்தியா பி, ஆஸ்திரேலியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ ஆகிய நான்கு அணிகள் கலந்துகொண்டு ஆடும் ஒருநாள் தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா ஏ அணியும் மனீஷ் பாண்டே தலைமையிலான இந்தியா பி அணியும் நேற்று மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி, முதலில் பேட்டிங் ஆடியது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் ரவிக்குமார் சாமர்த் ரன் ஏதும் எடுக்காமலும், சூர்யகுமார் யாதவ் 11 ரன்னிலும் அவுட்டாகினர். ஏ அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்(20), நிதிஷ் ராணா(9), குருணல் பாண்டியா(18) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். 

அம்பாதி ராயுடு மட்டும் நிலைத்து ஆடி 48 ரன்கள் அடித்தார். ராயுடுவிற்கு பிறகு சஞ்சு சாம்சனும் கிருஷ்ணப்பா கௌதமும் ஓரளவிற்கு ஆடி ரன்கள் சேர்த்தனர். சாம்சன் 32 ரன்களும் கௌதம் 35 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து அந்த அணி 49 ஓவர்களுக்கு 217 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. 

218 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா பி அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷான் 25 ரன்களுக்கு அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான மயன்க் அகர்வால், அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். இந்தியா பி அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். அவருக்கு கில் ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். 42 ரன்களில் கில் அவுட்டானார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய அகர்வால் சதமடித்து அசத்தினார். 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 124 ரன்கள் குவித்து அகர்வால் அவுட்டானார். அகர்வால் அவுட்டானதற்கு பிறகு வெற்றிக்கு வெறும் 14 ரன்களே தேவை என்பதால், 42வது ஓவரிலேயே இலக்கை எட்டி பி அணி வெற்றி பெற்றது. 

இங்கிலாந்தில் நடந்த இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ஏ, இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடரிலும் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக ஆடி ரன்களை குவித்ததோடு அணிக்கும் வெற்றியை தேடித்தந்த மயன்க் அகர்வால், தொடர்ந்து தனது திறமையை நிரூபித்துவருகிறார்.
 

click me!