நாங்க பண்ணதுலயே உங்க “தல”ய வச்சு பண்ணதுதான் தரமான சம்பவம்!! தெறிக்கவிடும் மேக்ஸ்வெல்

By karthikeyan VFirst Published Feb 25, 2019, 3:07 PM IST
Highlights

127 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸ்தான் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 43 பந்துகளில் 56 ரன்களை அடித்து அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார் மேக்ஸ்வெல். 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 5 ரன்களில் வெளியேற, அதன்பிறகு ராகுலும் கோலியும் சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஆனால் அவசரப்பட்ட கோலி ஸாம்பாவின் பந்தை தூக்கி அடித்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரிஷப் பண்ட் ஒரு ரன்னில் ரன் அவுட்டாக, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் அரைசதம் அடித்ததும் 50 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அதன்பிறகு தினேஷ் கார்த்திக் மற்றும் குருணல் பாண்டியா ஆகிய இருவரும் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தோனி நிலைத்து நின்றார். ஆனாலும் அதனால் பலனில்லை. டெத் ஓவர்களில் தோனியை ரன் அடிக்கவிடாமல் கட்டுக்கோப்பாக வீசினர் ஆஸ்திரேலிய பவுலர்கள்.

முதல் 10 ஓவர்களில் 80 ரன்களை குவித்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் வெறும் 126 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது. கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் இந்திய அணியின் ரன்ரேட்டை மொத்தமாக கட்டுப்படுத்தினர் ஆஸ்திரேலிய பவுலர்கள். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்ததும் இதற்கு ஒரு காரணம். எனினும் தோனி களத்தில் நின்றும் கூட ஒன்றும் செய்யமுடியவில்லை. தோனி கடைசிவரை நிராயுதபாணியாகவே களத்தில் நின்றார். 

127 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸ்தான் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 43 பந்துகளில் 56 ரன்களை அடித்து அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார் மேக்ஸ்வெல். 

இந்த போட்டி குறித்தும் ஆடுகளம் குறித்தும் பேசிய மேக்ஸ்வெல், இந்த ஆடுகளம் பேட்டிங் ஆடுவதற்கு கடினமாகவே இருந்தது. எந்த பேட்ஸ்மேனுக்கும் இங்கு பேட்டிங் ஆடுவது கடினம்தான். உலகின் சிறந்த ஃபினிஷர் தோனி. ஆனால் அவரே மிடில் ஓவர்களில் பேட்டிங் ஆட கஷ்டப்பட்டார். கடைசி ஓவரிலும் அவர் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தார். கடைசி ஓவரில் தோனியை ஒரு சிக்ஸருடன் கட்டுப்படுத்தியது மிகப்பெரிய விஷயம். கடைசி ஓவரில் இந்திய அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். 
 

click me!