எல்லாமே பக்காவா பிளான் பண்ணிதான் செஞ்சோம்!! கடைசி ஓவரை வீசிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் சொன்ன ரகசியம்

By karthikeyan VFirst Published Nov 22, 2018, 4:54 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணி 158 ரன்கள் குவித்த நிலையில், டி.எல்.எஸ் முறைப்படி இந்திய அணிக்கு 17 ஓவருக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை விரட்டிய இந்திய அணியின் ரோஹித் சர்மா(7), கோலி(4) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஃபின்ச் மற்றும் ஷார்ட் திணறினாலும் பின்னர் களத்திற்கு வந்த கிறிஸ் லின், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் ஆகிய மூவரும் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 

லின் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் தலா 4 சிக்ஸர்களை விளாசினர். ஸ்டோய்னிஸும் தன் பங்கிற்கு அடித்து ஆடினார். போட்டியின் குறுக்கே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 17 ஓவர் முடிவில் 158 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலிய அணி 158 ரன்கள் குவித்த நிலையில், டி.எல்.எஸ் முறைப்படி இந்திய அணிக்கு 17 ஓவருக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை விரட்டிய இந்திய அணியின் ரோஹித் சர்மா(7), கோலி(4) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். ராகுலும் 13 ரன்களில் நடையை கட்டினார். ஆனால் தவான் மட்டும் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி பவுண்டரிகளாக விளாசிய தவான் 42 பந்துகளில் 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

தவான் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தை கையில் எடுத்த தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடி வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து ரிஷப் பண்ட்டும் அதிரடியாக ஆடினார். ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 23 பந்துகளில் 41 ரன்களை சேர்த்தது. இந்த ஜோடி ஆடியபோது இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது, அனைவரும் நம்பிக்கையிலும் இருந்தனர். ஆனால் ரிஷப் பண்ட் 20 ரன்களில் வெளியேற ஆட்டம் மீண்டும் கைமாறியது. கடைசி நேரத்தில் குருணல் பாண்டியா சொதப்ப மொத்த நெருக்கடியும் தினேஷ் கார்த்திக்கிற்கு சென்றதால் வேறு வழியின்றி இக்கட்டான சூழலில் தூக்கி அடிக்க வேண்டிய கட்டாயத்தில் அவரும் தூக்கியடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் பெரும்பாலான பந்துகளை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மெதுவாகவே வீசினர். மைதானம் பெரியது என்பதால் ஸ்லோ டெலிவரிகளை வீசி பவுண்டரி லைனில் வைத்து கேட்ச் பிடிக்கும் உத்தியை கையாண்டனர். குறிப்பாக கடைசி நேரத்தில் அதிகமான ஸ்லோ டெலிவரிகளை வீசினர். 

கடைசி ஓவரில் கடைசி மூன்று பந்துகளிலும் பவுண்டரி தேவை என்ற நிலையில், அந்த சூழலிலும் ஸ்லோ டெலிவரியை போட்டு தினேஷ் கார்த்திக் ஓங்கி அடித்த பந்தை லாங் ஆஃப் திசையில் கேட்ச் செய்தனர். கடைசி ஓவரை வீசிய ஆஸ்திரேலிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் இதுகுறித்து பேசினார். அப்போது பேசிய ஸ்டோய்னிஸ், கடைசி ஓவர்களை நான் வீச வேண்டியதாக இருக்கும் என என்னிடம் ஏற்கனவே கேப்டன் ஃபின்ச் கூறியிருந்தார். மேலும் பந்தின் வேகத்தை குறைத்து வீசி, பேட்ஸ்மேனை அடித்து ஆடவைத்து பவுண்டரி லைனில் கேட்ச் செய்வதே எங்கள் திட்டம். அதை கடைசி நேரத்தில் நூறு சதவிகிதம் நான் சரியாக செய்தேன் என்று மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவித்தார். 

pic.twitter.com/lUXnAlL5qC

— Baahubali (@bahubalikabadla)
click me!