ஆசிய கோப்பையை ஜெயிச்சோட்டோம்னு ஆட்டம் போடாதீங்க!! முன்னாள் ஜாம்பவான் எச்சரிக்கை.. இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Oct 1, 2018, 2:41 PM IST
Highlights

ஆசிய கோப்பையை வென்றிருந்தாலும் இந்திய அணி இன்னும் முழுமையான வலுவான அணியாக இல்லை என முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார். 
 

ஆசிய கோப்பையை வென்றிருந்தாலும் இந்திய அணி இன்னும் முழுமையான வலுவான அணியாக இல்லை என முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார். 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையை வென்று அசத்தியது. உலக கோப்பைக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், இந்திய அணி மிகப்பெரிய ஒருநாள் தொடரை வென்றிருப்பது இந்திய அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. 

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். விராட் கோலியை சார்ந்தே இந்திய அணி இருக்கிறது என்ற பொதுப்பார்வையை ஆசிய கோப்பை வெற்றி உடைத்திருக்கிறது. 

ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றிருந்தாலும் இந்திய அணி இன்னும் முழுமை பெற்ற வலுவான அணியாக இல்லை என்பதே உண்மை. அதைத்தான் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணனும் கூறியுள்ளார். இந்திய அணியின் வெற்றிகள் அனைத்தும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியதாலோ அல்லது எதிரணி குறைந்த ஸ்கோர் எடுத்ததாலோ பெறப்பட்டதாகவே உள்ளது. 

இந்திய அணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மிடில் ஆர்டரில் சொதப்பிவருகிறது. உலக கோப்பைக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே அதற்கான முயற்சிகளில் இந்திய அணி நிர்வாகம் இறங்கியுள்ளது என்றாலும் கூட, ஆசிய கோப்பையில் சரியான மிடில் ஆர்டர்களை தேட இந்திய அணி தீவிரம் காட்டியது. 

ஆனால் அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோ பெரியளவில் சோபிக்கவில்லை. ஆசிய கோப்பையிலும் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் மற்றும் தவான் ஆகிய இருவரின் சிறப்பான ஆட்டத்தால்தான் இந்திய அணி வென்றது. லீக் சுற்றை பொறுத்தமட்டில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே 200 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்ததால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எளிதானது. 

சூப்பர் 4 சுற்றிலும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் அதிகமான ஸ்கோரை அடிக்கவில்லை. மேலும் அந்த போட்டிகளிலும் ரோஹித்தும் தவானும் அருமையாக ஆடி வெற்றி தேடித்தந்தனர். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான இறுதி போட்டி ஆகிய இரண்டு போட்டிகளும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் முகத்திரையை கிழித்தன. இந்த இரண்டு போட்டிகளிலுமே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடி வெற்றியை பெற்றுத்தர வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இரண்டிலுமே மிடில் ஆர்டர்கள் சொதப்பினர். அதனால் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி கடைசி நேரத்தில் பரபரப்பாக டிரா ஆனது. 

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி ஆகிய மிடில் ஆர்டர்கள் பொறுப்புடன் ஆடி வெற்றியை பெற்று கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்ய தவறியதால், போட்டி கடைசி பந்துவரை ஜவ்வாக இழுக்கப்பட்டது. வெறும் 223 ரன்கள் என்ற இலக்கிற்கு ஜடேஜாவும் புவனேஷ்வர் குமாரும் பங்களிப்பு செய்யும் அளவிற்கு ஆனது. 

எனவே இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு சரியான வீரர்களை தேர்வு செய்து உலக கோப்பையை அணுக வேண்டிய தேவை உள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள விவிஎஸ் லட்சுமணன், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகிய மூவர் மட்டுமே இந்திய அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை சேர்த்து கொடுத்துள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கு அது ரொம்ப முக்கியம். 

ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இறுதி வரை நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டனர். உலக கோப்பைக்கு முன்னதாக சுமார் 24 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ளது. எனவே இந்த போட்டிகளில் முடிந்தவரை வீரர்களுக்கு வாய்ப்பளித்து சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுத்து உலக கோப்பைக்கு செல்ல வேண்டும் என லட்சுமணன் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!