என்னை செதுக்கியவர் டிராவிட்.. குருவுக்கு நன்றி செலுத்திய இளம் வீரர்

By karthikeyan VFirst Published Oct 1, 2018, 1:50 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் மயன்க் அகர்வால், தனது பேட்டிங்கை செதுக்கியது ராகுல் டிராவிட் தான் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் மயன்க் அகர்வால், தனது பேட்டிங்கை செதுக்கியது ராகுல் டிராவிட் தான் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

26 வயதான கர்நாடக வீரர் மயன்க் அகர்வால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியா ஏ அணியிலும் ரஞ்சி டிராபியிலும் சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகிறார். இவரும் இந்திய பெருஞ்சுவர் ராகுல் டிராவிட்டின் மாணவன் தான்.

ராகுல் டிராவிட்டிடம் பயிற்சி பெற்று வரும் வீரர்கள் திறமையிலும் மனவலிமையிலும் சிறந்த வீரர்களாக உருவாகி வருகின்றனர். இந்திய அணியில் ஆடும்போது அணிக்காக பெரும் பங்காற்றிய ராகுல் டிராவிட், ஓய்விற்கு பிறகும் இந்திய அணிக்காகவே உழைத்து கொண்டிருக்கிறார். 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி, இந்திய ஏ அணி ஆகியவற்றின் பயிற்சியாளராக இருக்கும் டிராவிட், பல இளம் திறமைகளை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறார். 

பிரித்வி ஷா, ஷுப்மன் கில், ஷிவம் மாவி, கலீல் அகமது நாகர்கோடி, இஷான் கிஷான், மயன்க் அகர்வால்  போன்ற சிறந்த வீரர்களை உருவாக்கி கொடுத்துள்ளார் ராகுல் டிராவிட். இவர்கள் ஐபிஎல்லிலும் நல்ல தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மயன்க் அகர்வால், தனது பேட்டிங் திறமையை வளர்த்துக்கொண்டதில் டிராவிட்டின் பங்களிப்பு குறித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அகர்வால், எங்களை போன்ற இளம் வீரர்களுக்கு எப்போதெல்லாம் எதைப்பற்றியெல்லாம் ஆலோசனை தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் எங்களுக்கு உதவுபவர் டிராவிட். அவரது அறிவுரைகளை நான் அப்படியே பின்பற்றினேன். அவரது அறிவுரைகள் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தன. என்னுடைய பேட்டிங் திறன் மற்றும் மனவலிமை ஆகியவற்றை டிராவிட் மேம்படுத்தியிருக்கிறார் என அகர்வால் கூறியுள்ளார். 
 

click me!