அஸ்தமனம் ஆயிடுச்சா அவரோட கிரிக்கெட் வாழ்க்கை..? கும்ப்ளே என்ன சொல்றாருனு பாருங்க

By karthikeyan VFirst Published Jan 10, 2019, 11:46 AM IST
Highlights

ரிஷப் பண்ட் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். விக்கெட் கீப்பிங்கில் சில குறைகள் இருந்தாலும், பேட்டிங்கில் தனது திறமையை நிரூபித்துவிட்டார். 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2014ம் ஆண்டு தோனி ஓய்வுபெற்ற பிறகு, ரித்திமான் சஹா இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த சஹா, அதன்பிறகு இந்திய அணியில் ஆடவேயில்லை. இதற்கிடையே ஐபிஎல்லில் ஆடி காயத்தை வளர்த்துக்கொண்டார். அதிலிருந்து அவர் மீள்வதற்குள்ளாக ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட், இங்கிலாந்து சுற்றுப்பயணம், வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் என காலம் ஓடிவிட்டது. 

சஹா விட்டுச்சென்ற இடத்தை பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் ஆகியோரை வைத்து நிரப்ப முயன்ற இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாததால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார். 

ரிஷப் பண்ட் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். விக்கெட் கீப்பிங்கில் சில குறைகள் இருந்தாலும், பேட்டிங்கில் தனது திறமையை நிரூபித்துவிட்டார். இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதம் விளாசிய ரிஷப், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இரண்டு முறை 90 ரன்களுக்கு மேல் அடித்து சதத்தை தவறவிட்டார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் டெஸ்ட் அணியில் தனது இடத்தை மிக வலுவாக தக்கவைத்துள்ளார் ரிஷப்.

இதுவரை 9 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 சதங்களுடன் 696 ரன்களை குவித்துள்ளார். 2 சதங்களுமே சாதனை சதங்கள். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு நாடுகளிலுமே முதன்முறையாக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட ரிஷப் பண்ட், இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். 

மிகச்சிறந்த விக்கெட் கீப்பரான சஹா, இனிமேல் முழு உடற்தகுதியுடன் திரும்பிவந்தாலும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சஹா உடற்தகுதியுடன் திரும்பினால் ரிஷப் பண்ட்டின் நிலை என்ன..? என்பதும் சஹாவிற்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பதும் பெரும் சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே, முக்கியமான சமயத்தில் சஹா காயமடைந்தது அவருக்கு நடந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான விஷயம்தான். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும்தான் ஆடிவருகிறார். மிகச்சிறந்த திறமையான விக்கெட் கீப்பரான சஹா, சமகால கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர். ஆனால் காயத்தால் அவர் விலகியதால் கிடைத்த வாய்ப்பை ரிஷப் பண்ட் அருமையாக பயன்படுத்தி கொண்டார். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் இன்னும் மேம்படுத்தி கொள்ள வேண்டும். அவர் இளம் வீரர்தான் என்பதால் போகப்போக விக்கெட் கீப்பிங்கில் இருக்கும் குறைகளை திருத்திக்கொள்வார். ஆனால் அவரது பேட்டிங் அபாரமாக இருக்கிறது. ரிஷப் பண்ட் தனக்கென ஒரு இடத்தை டெஸ்ட் அணியில் பிடித்துவிட்டதால், இனிமேல் சஹாவிற்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம்தான் என்று கும்ப்ளே தெரிவித்துள்ளார். 

click me!