அஷ்வின் இல்லைனாலும் பரவாயில்ல.. ஆனால் அவரை டீம்ல எடுக்க சான்ஸே இல்ல!! கோலி திட்டவட்டம்

By karthikeyan VFirst Published Jan 2, 2019, 5:14 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்க உள்ளது. 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்க உள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. எனவே தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அஷ்வின் காயத்திலிருந்து மீண்டாலும் போட்டியில் ஆடும் அளவிற்கான உடற்தகுதியை பெற்றுவிட்டாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனாலும் 13 பேர் கொண்ட அணியில் அஷ்வினின் பெயரும் உள்ளது. அவர் ஆடுவாரா இல்லையா என்பது நாளை போட்டி தொடங்குவதற்கு முன்பாகத்தான் உறுதி செய்யப்படும். எனினும் அந்த 13 பேரில் ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக உமேஷ் யாதவும் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ராகுலும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அஷ்வின் ஒருவேளை நாளை ஆடவில்லை என்றால், குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகிய இரண்டு ஸ்பின்னர்களுடனும் ஷமி மற்றும் பும்ரா ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடனும் இந்திய அணி களமிறங்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்க வாய்ப்பில்லை என்பதை கோலி தெரிவித்துள்ளார்.

நாளை கடைசி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில், இதுகுறித்து பேசிய கோலி, அஷ்வின் ஆடாததால் இந்த தொடர் முழுவதுமே அணியில் சிறிய மாற்றங்களை செய்ய நேர்ந்தது. ஹனுமா விஹாரி அபாரமாக பந்துவீசுகிறார். அவர் ஒரு நல்ல ஸ்பின் பவுலிங் தேர்வாக எங்களுக்கு தெரிகிறார். எப்போதெல்லாம் அவரிடம் பந்தை கொடுக்கிறோமோ அப்போதெல்லாம் விக்கெட்டை எடுத்து கொடுக்கிறார். சரியான இடங்களில் பந்துகளை வீசி ரன்களை கட்டுப்படுத்துவதோடு விக்கெட்டுகளையும் எடுக்கிறார். எனவே அவரை ஒரு நாளில் 10 முதல் 15 ஓவர்கள் வரை வீசவைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் அஷ்வின் ஆடினால், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அணியில் இருப்பர் என்பதும் ஒருவேளை அஷ்வின் ஆடாவிட்டால், ஸ்பின் பவுலிங்கில் ஜடேஜாவை மட்டும் நம்பி இந்திய அணி களமிறங்க உள்ளதும் ஹனுமா விஹாரியை இரண்டாவது ஸ்பின் பவுலராக பயன்படுத்த உள்ளதும் தெரிகிறது. 
 

click me!