கோ கோ உலகக் கோப்பை 2025: 'இந்தியா கோப்பையை தட்டித் தூக்கும்'; ஆண்கள் அணியின் பயிற்சியாளர் உறுதி!

By Rayar r  |  First Published Jan 12, 2025, 3:27 PM IST

'கோ கோ உலகக்கோப்பை 2025' தொடர் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், இந்திய ஆண்கள் கோ கோ அணியின் தலைமைப் பயிற்சியாளர் அஸ்வனி குமார் சர்மா, 'இந்திய அணி கோப்பையை வெல்லும்' என உறுதிபடத் தெரிவித்துள்ளார். 
 


கோ கோ உலகக் கோப்பை 2025

உலக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 'கோ கோ உலகக் கோப்பை 2025' தொடர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நாளை (ஜனவரி 13) முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா உள்பட 39 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்ள இருக்கின்றனர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், இந்திய ஆண்கள் கோ கோ அணியின் தலைமைப் பயிற்சியாளர் அஸ்வனி குமார் சர்மா, Asianet Newsable ஹீனா ஷர்மாவுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது விளையாட்டில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களை ஈர்க்கும்  கருத்தைப் பற்றி விவாதித்த அவர் உலகக்கோப்பை நெருங்கி வருவதால் கோ கோ புதிய உயரங்களை எட்டுவதற்கான தேவையையும் வலியுறுத்தினார். 

இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளர்

இது தொடர்பாக பேசிய அவர் "இந்த விளையாட்டு நீண்ட தூரம் வந்துள்ளது. கோ கோ இந்த அளவிற்கு வரும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. இந்திய ஆண்கள் அணிக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பை எனக்கு வழங்கியதற்கு நான் கூட்டமைப்புக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த அணியை சர்வதேச அளவில் கொண்டு செல்வது எனது பொறுப்பு, மேலும் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்'' என்றார்.

தொடர்ந்து பேசிய அஸ்வனி குமார் சர்மா,''சமநிலை மற்றும் வலிமைக்கு கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி, உலக அரங்கில் சிறப்பாக செயல்படும் திறன் கொண்டதாக உள்ளது.நாங்கள் அழுத்தத்தில் இல்லை. தேர்வாளர்கள் ஒரு சீரான அணியைத் தேர்ந்தெடுத்துள்ளனர், நமது வீரர்கள் நாட்டைப் பெருமைப்படுத்துவார்கள் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

மேலும் புதிய விதிகள் மற்றும் உத்திகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் உலகக் கோப்பையில் கூடுதல் உற்சாகத்தை சேர்க்கும் என்று தெரிவித்த அஸ்வனி குமார் சர்மா இது கோ கோ விளையாட்டை வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் துடிப்பானதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் மாற்றும் என்று கூறினார்.

 

இந்தியா-நேபாளம் மோதல் 

கோ கோ உலகக்கோப்பை தொடர் நாளை (ஜனவரி 13) ஆண்கள் பிரிவில் இந்தியா மற்றும் நேபாள அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்க உள்ளது. மகளிர் பிரிவில், இந்திய அணி ஜனவரி 14ம் தேதி தென் கொரியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியை தொடங்கும். கோ கோ உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 39 அணிகள் பங்கேற்கின்றன. 

ஆண்கள் பிரிவில் 20 அணிகளும் மற்றும் பெண்கள் பிரிவில் 19 அணிகளும் கலந்து கொள்கின்றன. ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 20 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ஏ பிரிவில் நேபாளம், பெரு, பிரேசில் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடன் உள்ளது. லீக் போட்டிகள் ஜனவரி 16 வரை நடைபெறும், பிளே ஆஃப் போட்டிகள் ஜனவரி 17 அன்று தொடங்கும். இறுதிப் போட்டி ஜனவரி 19 அன்று நடைபெறும். 

மகளிர் அணியில் முதல் போட்டி யாருடன்? 

மகளிர் பிரிவில்  19 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா அணி ஏ பிரிவில் ஈரான், மலேசியா மற்றும் தென் கொரியாவுடன்  உள்ளது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் மற்றும் இரண்டு சிறந்த மூன்றாவது இடத்தைப் பிடித்த அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

click me!