கோலி இல்லாத கேப்பில் ரோஹித்துக்கு கெத்தை ஏற்றிவிடும் ஃபாஸ்ட் பவுலர்

By karthikeyan VFirst Published Feb 9, 2019, 4:01 PM IST
Highlights

முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய இந்திய பவுலர்கள், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியின் ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தனர். குறிப்பாக டெத் ஓவர்களில் அருமையாக பந்துவீசினர். 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டுவருகிறார். 

ரோஹித் சர்மாவின் தலைமையில் ஆடிய கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் படுதோல்வியும் ஒன்றில் வெற்றியும் அடைந்தது இந்திய அணி. டி20 தொடரிலும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. 

பொதுவாகவே விராட் கோலியின் கேப்டன்சியின் மீது சில விமர்சனங்கள் உண்டு. பவுலிங் சுழற்சி, வீரர்களை பயன்படுத்தும் விதம், கள வியூகம் ஆகியவை குறித்த விமர்சனங்கள் உண்டு. ஆனால் சமீபத்தில் அவரது கேப்டன்சி மேம்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் கேப்டன்சியை பொறுத்தமட்டில் கோலியைவிட ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படுவதாக ஒரு கருத்து உள்ளது. 

விராட் கோலி இல்லாத நேரங்களில் ரோஹித் சர்மா அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த பணியை செய்தும் வருகிறார். வீரர்களை கையாளும் விதம், கள வியூகம் ஆகியவற்றில் ரோஹித் சர்மா சிறப்பாகவே செயல்படுகிறார். அதுமட்டுமல்லாமல், நெருக்கடியான சூழல்களிலும் அந்த அழுத்தத்தை வீரர்கள் மீது திணிக்காமல் நிதானமாக கையாள்கிறார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே அந்த அணி சிறப்பாக ஆடி, 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு டி20 கிரிக்கெட்டில் மோசமான தோல்வியை பரிசளித்தது. அந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் சிறப்பாக ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியை கடைசி ஓவர்களில் முழுவதுமாக கட்டுப்படுத்தி, 158 ரன்களில் சுருட்டியது. 159 ரன்கள் என்ற இலக்கை எளிதாக விரட்டி வெற்றி பெற்றது. 

முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய இந்திய பவுலர்கள், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியின் ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தனர். குறிப்பாக டெத் ஓவர்களில் அருமையாக பந்துவீசினர். இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் இளம் பவுலர் கலீல் அகமது, நியூசிலாந்தில் காற்று அதிகமாக அடிப்பதால் பந்துவீசுவது கடினம். முதல் போட்டியில் சரியாக பந்துவீசவில்லை. ஆனால் இந்த போட்டியில் ரோஹித் சர்மாவின் ஆலோசனைகள் பந்துவீச்சில் பக்கபலமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் எந்தெந்த பகுதிகளை டார்கெட் செய்வார்கள் என்பதை விளக்கமாக கூறி, எந்தெந்த ஏரியாவில் எப்படி பந்துவீச வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கியதாக கலீல் அகமது தெரிவித்தார். 

click me!