
கங்குலி தான் சிறந்த கேப்டன் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபீல்டராக வலம்வந்தவர் முகமது கைஃப். சர்வதேச கிரிக்கெட்டில் ஃபீல்டிங் என்றால் ஜாண்டி ரோட்ஸ் நினைவுக்கு வருவதுபோல, இந்திய அணியை பொறுத்தவரை கைஃபின் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்தளவிற்கு மிகச்சிறந்த ஃபீல்டர் கைஃப். 2000ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடினார் கைஃப்.
அதன்பிறகு இந்திய அணியில் ஆடவில்லை. எனினும் ஓய்வு அறிவிக்காமல் இருந்துவந்தார். இந்நிலையில் கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் கைஃப். கைஃப், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோரின் கேப்டன்சியின் கீழ் ஆடியுள்ளார்.
இந்நிலையில், மை நேஷன் ஆங்கில இணையதளத்திற்கு கைஃப் அளித்த பேட்டியில், அவர் ஆடியதில் எந்த கேப்டன் சிறந்த கேப்டன் என்ற கேள்விக்கு, ஏன் என்ற காரணத்துடன் பதிலளித்துள்ளார் கைஃப். யார் சிறந்த கேப்டன் என்ற கேள்விக்கு பதிலளித்த கைஃப், என்னை பொறுத்தவரையில் கங்குலி தான் மிகச்சிறந்த கேப்டன். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற சமயத்தில் அணியில் பல பிரச்னைகள் இருந்தன. இந்திய அணிக்கு கடினமான காலம் அது. அப்படியொரு கடின காலத்தில் கேப்டனாக பொறுப்பேற்று பயிற்சியாளர் ஜான் ரைட்டுடன் இணைந்து இந்திய அணியை வளர்த்தெடுத்தார் கங்குலி.
பல சவால்களையும் சமாளித்து, என்னை போன்ற இளம் வீரர்களை ஊக்குவித்து அணியை வளர்த்தார் கங்குலி. சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற சீனியர் வீரர்களின் உதவியுடன் இந்திய அணியின் கடின காலத்திலிருந்து அணியை சிறப்பான அணியாக உருவாக்கியவர் கங்குலி. சீனியர் மற்றும் இளம் வீரர்கள் அடங்கிய கலவையான அணியை உருவாக்கி இந்திய அணியின் அடித்தளத்தை அமைத்து கொடுத்தவர் கங்குலி என கைஃப் புகழாரம் சூட்டினார்.
சூதாட்டப் புகாரால் இந்திய அணி சின்னா பின்னமான சமயம் 2000ம் ஆண்டு. அந்த சமயத்தில் துவண்டு கிடந்த இந்திய அணியின் கேப்டன் ஆனார் காங்குலி. அப்படியொரு இக்கட்டான நிலையில் அணியை ஒருங்கிணைத்து உலக அரங்கில் ஒரு கம்பீர நடை போட வைத்தவர் கங்குலி. இந்திய அணியை பார்த்து சிரித்தவர்களை மிரளவைத்தவர் கங்குலி.
அந்த காலக்கட்டத்தில் வலுவாக திகழ்ந்த ஆஸ்திரேலியா போன்ற அணிகளை அதன் சொந்த மண்ணிலேயே தெறிக்கவிட்டவர் கங்குலி. சேவாக், யுவராஜ், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், கைஃப் போன்ற இளம் வீரர்களை இனம்கண்டு வாய்ப்பு கொடுத்து வளர்த்தெடுத்தார். சேவாக்கை ஓபனிங் இறக்கியது, தோனியை முன்வரிசையில் இறக்கி அவரது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கொடுத்தது, 2003 உலக கோப்பையின் இறுதி போட்டிக்கு அழைத்து சென்றது என கங்குலி, ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார்.