அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் முதல் போட்டியில் அபாரம்...

First Published Dec 9, 2016, 12:27 PM IST
Highlights


இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது.

மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.

எனவே, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் வான்கடே டெஸ்டில் இந்தியா களமிறங்கியுள்ளது. மறுமுனையில், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. 

இதற்கு முன்பாக கடந்த 1985-1987 காலகட்டத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து 17 போட்டிகளில் தோல்வியைத் தழுவாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது 16 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி காணாமல் தொடர்ந்து வரும் இந்திய அணி, வான்கடே டெஸ்டிலும் தோல்வியை தவிர்கும் பட்சத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை பெறும்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரஹானே, சமிக்குப் பதிலாக ராகுல், புவனேஸ்வர் குமார் இடம்பெற்றுள்ளார்கள். இங்கிலாந்து அணியில் கீட்டன் ஜென்னிங்ஸ், ஜேக் பால் புதிதாக இடம்பெற்றுள்ளார்கள். 

முதல்நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 31 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் எடுத்தது. குக் 46 ஓட்டங்களில் ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார். அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் 89 பந்துகளில் அரை சதம் எடுத்தார்.

உணவு இடைவேளையின்போது ஜென்னிங்ஸ் 65, ரூட் 5 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இதன்பிறகு 21 ஓட்டங்களில் அஸ்வினிடம் வீழ்ந்தார் ரூட். முக்கியமான இரு பேட்ஸ்மேன்கள் வெளியேறியதால் இனி இந்திய அணியிடம் இங்கிலாந்து திணற ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் அபாரமாக ஆடி முதல் போட்டியிலேயே தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். 186 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி முதல் நாளன்று ஆதிக்கம் செலுத்துகிற நிலைமை உருவாகியுள்ளது. 

தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 62 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்கள் எடுத்தது. ஜென்னிங்ஸ் 103, மொயீன் அலி 25 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இதன்பிறகு அஸ்வின் அற்புதமாகப் பந்துவீசினார். ஒரே ஓவரில் மொயீன் அலி மற்றும் ஜென்னிங்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். அலி 50, ஜென்னிங்ஸ் 112 ஓட்டங்கள் எடுத்தார்கள். இதன்பின்னர் 14 ஓட்டங்களில் பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸும் பட்லரும் பொறுப்பாக ஆடினார்கள்.

முதல்நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி, 94 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோக்ஸ் 25, பட்லர் 18 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்தியத் தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

tags
click me!