சொந்த மண்ணில் முதல் சதம் விளாசிய ஜடேஜா!! சிக்ஸர் மழையில் நனைந்த ரசிகர்கள்

By karthikeyan VFirst Published Oct 5, 2018, 2:33 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பிரித்வி ஷா, கோலியை தொடர்ந்து ஜடேஜாவும் சதம் விளாசினார். சொந்த மண்ணில் சிக்ஸர் மழை பொழிந்த ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பிரித்வி ஷா, கோலியை தொடர்ந்து ஜடேஜாவும் சதம் விளாசினார். சொந்த மண்ணில் சிக்ஸர் மழை பொழிந்த ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் ராகுல் டக் அவுட்டானார். முதல் போட்டியில் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷா அபாரமாக ஆடி சதமடித்தார். அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். பிரித்வி ஷா 134 ரன்களும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அருமையாக ஆடிய புஜாரா 86 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 206 ரன்களை சேர்த்தது. 

அதன்பிறகு கோலியும் ரஹானேவும் ஜோடி சேர்ந்து நன்றாக அணியை எடுத்து சென்றனர். ரஹானே 41 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் களத்தில் நின்ற நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 364 ரன்கள் எடுத்திருந்தது. 

இரண்டாம் நாள் ஆட்டத்தை கோலியும் ரிஷப் பண்ட்டும் இன்று தொடர்ந்தனர். நிதானமாக ஆடிய கோலி, 24வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அதிரடியாக ஆடி சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசிய ரிஷப் பண்ட் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து கோலி 139 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு ஆட்டத்தை ஜடேஜா கையில் எடுத்தார். அஷ்வின் 7 ரன்களிலும் குல்தீப் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார் ஜடேஜா. குல்தீப் ஆட்டமிழந்த பிறகு ஜடேஜாவுடன் உமேஷ் யாதவ் ஜோடி சேர்ந்தார். 

அதன்பிறகு அதிரடியாக ஆட தொடங்கிய ஜடேஜா, சிக்ஸர் மழை பொழிந்தார். ஸ்பின் பவுலிங்கை தொடர்ந்து சிக்ஸருக்கு பறக்கவிட்டார். ஜடேஜா ஒருபுறம் சிக்ஸர் மழை பொழிய மறுமுனையில் உமேஷ் யாதவும் இரண்டு சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். ஜடேஜா - உமேஷ் யாதவ் ஜோடி 9வது விக்கெட்டுக்கு, 7 ஓவரில் 55 ரன்களை சேர்த்தது. 

உமேஷ் யாதவ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் முகமது ஷமி ஜோடி சேர்ந்தார். இதுதான் கடைசி விக்கெட் என்பதால், ஷமியை பேட்டிங் முனைக்கு விடாமல் எதிர்முனையிலேயே நிறுத்தி அருமையாக சமாளித்து ஆடினார் ஜடேஜா. ஆனால் ஷமியும் அவுட்டாகிவிடாமல் விக்கெட்டை பாதுகாத்து ஜடேஜா சதமடிக்க உதவினார். 

5 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தனது சொந்த மண்ணில் முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் ஜடேஜா. இதையடுத்து 9 விக்கெட் இழப்ப்பிற்கு 649 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 
 

click me!