
வலுவான அணிகளுடன் சர்வதேச போட்டிகளில் இந்தியா மோதினால்தான் அதன் நிறை, குறைகள் அறிந்து செயல்பட முடியும் என்று கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.
கேப்டன் சுனில் சேத்ரி குருகிராமில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"ஐக்கிய அரபு நாடுகளில் ஆசியக் கோப்பை கால்பந்து 2019 போட்டிகள் நடக்க இன்னும் 6 மாதங்கள் உள்ளன. அதற்குள் இந்திய அணியை தயார்படுத்த வேண்டும்.
இதற்காக வலுவான அணிகளுடன் சர்வதேச போட்டிகளில் இந்தியா மோத வேண்டும். அப்போது தான் அணியின் நிறை, குறைகளை அறிந்து செயல்பட முடியும்.
கடந்த 2011-ஆம் ஆண்டு போட்டியில் துவக்கச் சுற்றிலேயே வெளியேற நேர்ந்தது. உள்நாட்டில் நடந்த போட்டிகளில் நாம் வெற்றிகளை குவித்துள்ளோம். ஆனால் வெளிநாட்டில் நடந்த போட்டிகளில் நமது வெற்றி சராசரி குறிப்பிடும்படி இல்லை.
உலக கோப்பை தகுதிச் சுற்று, ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்தியா சரிவர விளையாடவில்லை.
வரும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியாவுடன், யுஏஇ, தாய்லாந்து, பஹ்ரைன் அணிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை குறைத்து மதிப்பிட முடியாது.
தொடர்ந்து 13 போட்டிகளில் வென்றதால் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களில் வந்துளளோம். இதற்காக நாம் மகிழ்ச்சி அடைய முடியாது.
எஃப் சி பெங்களூரு அணி கடந்த மாதம் சூப்பர் கோப்பையை வென்றது சிறப்பானது. எனினும் ஏஎப்சி கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியுமா என்ற நிலையில் உள்ளோம்" என்று அவர் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.