இப்படி செய்யலாமா இஷாந்த் சர்மா..? அபராதம் விதித்த ஐசிசி

By karthikeyan VFirst Published Aug 5, 2018, 10:26 AM IST
Highlights

ஐசிசி விதிமுறைகளை மீறி ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதால், இந்திய பவுலர் இஷாந்த் சர்மாவிற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டேவிட் மாலனை ஆக்ரோஷமாக வழியனுப்பி வைத்ததற்காக இஷாந்த் சர்மாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களும் இந்திய அணி 274 ரன்களும் எடுத்தன. 

இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 194 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கோலியை தவிர வேறு எந்த வீரரும் சோபிக்காததால், இந்திய அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. 

இந்த போட்டியில் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் மூன்று விக்கெட்டுகளை அஷ்வின் அடுத்தடுத்து வீழ்த்தியபோதும் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மாலனும் பேர்ஸ்டோவும் சிறப்பாக ஆடினர். அந்த விக்கெட்டை வீழ்த்த இந்திய பவுலர்கள் போராடினர். நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டிருந்த நிலையில், மாலனின் விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், மாலனை நோக்கி ஆக்ரோஷமாக கத்தி வழியனுப்பி வைத்தார் இஷாந்த் சர்மா. 

ஐசிசி விதிமுறைகளின் படி, எதிரணி வீரர்களை நோக்கி ஆக்ரோஷமாக வார்த்தைகள் பேசுவது அல்லது சைகைகள் காட்டுவது, உடல்மொழிகள் மூலம் கோபமூட்டும் வகையில் பேசுவது, நடந்து கொள்வது லெவல்-1ன்படி குற்றமாகும். களத்தில் இஷாந்த் சர்மாவின் செயல்பாடு தொடர்பாக போட்டி நடுவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஐசிசி நடுவர் ஜெப், இஷாந்திடம் விசாரித்தார். அப்போது இஷாந்த் சர்மா ஆக்ரோஷமாக கத்தியதை ஒப்புக்கொண்டதால், போட்டி ஊதியத்தில் இருந்து 15% ஊதியத்தை அபராதமாக ஐசிசி விதித்துள்ளது. 
 

click me!