கோலிக்கு எதிராக ஒன்றுதிரளும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள்!!

By karthikeyan VFirst Published Nov 9, 2018, 1:21 PM IST
Highlights

அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் உலக கோப்பை இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடைபெறுகிறது. 

ஐபிஎல் 12வது சீசன் குறித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் கோரிக்கைக்கு எதிராக ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. எனவே கோலியின் கோரிக்கை நிறைவேற வாய்ப்பே இல்லை என்று பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. 

இதுவரை 11 ஐபிஎல் சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழுவிடம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு கோரிக்கையை முன்வைத்தார். ஹைதராபாத்தில் நடந்த நிர்வாகக்குழுவுடனான ஆலோசனையின்போது, ஐபிஎல் முடிந்ததும் உலக கோப்பை தொடங்குவதால், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு அடுத்த ஐபிஎல் சீசனில் முழு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் உலக கோப்பை இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடைபெறுகிறது. உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணி மோதும் முதல் போட்டி ஜூன் 5ம் தேதி தொடங்குகிறது. எனவே இடையில் 15 நாட்கள் இடைவெளி இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல்லில் அனைத்து போட்டிகளிலும் ஆடப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் அணிகளிலும் உடற்தகுதி நிபுணர்கள் இருக்கிறார்கள் எனும்போது அவர்கள் ஐபிஎல்லில் ஆடுவதில் எந்த பிரச்னையும் இல்லை என்பதே பிசிசிஐயின் உணர்வாக உள்ளதாக தெரிகிறது. எனவே விராட் கோலியின் கோரிக்கை நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

அதேபோல ரோஹித் சர்மாவும் விராட் கோலியின் கருத்தை ஏற்கவில்லை என்று அதே அதிகாரி கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கும் இறுதி போட்டிக்கும் தகுதி பெறும் நிலையில், அந்த அணியின் நட்சத்திர பவுலரான பும்ரா உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் மும்பை அணியில் ஆடுவார் என்றும் அவருக்கு ஓய்வளிக்க மாட்டோம் என்றும் ரோஹித் சர்மா தெரிவித்துவிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் கோலியின் இந்த கோரிக்கையை ஏற்கமாட்டார்கள் என்பதால் கோலியின் கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!