ஐபிஎல்-லின் நம்பகத்தன்மையை கெடுக்கும் நடுவர்கள்!! அடுத்தடுத்த சர்ச்சைகள்.. ஐபிஎல் தலைவரின் அறிவுரை

First Published Apr 24, 2018, 4:57 PM IST
Highlights
ipl chairman advice to umpires


ஐபிஎல் தொடரின் நடுவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுமாறு ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் 11வது சீசன் கடந்த 7ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து நடுவர்களின் முடிவுகள் சர்ச்சைகளை கிளப்பிவருகின்றன. நடுவர்களின் செயல்களால், ஐபிஎல் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாகியுள்ளது.

இந்த சீசனில் முதல்முறையாக டி.ஆர்.எஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், நடுவர்களின் பல முடிவுகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. இல்லையென்றால், அவையனைத்தும் தவறான முடிவுகளாக அமைந்து போட்டியின் போக்கையும் முடிவையும் மாற்றியிருக்கும். 

நடுவர்கள் தவறுகள் செய்வது வழக்கமானது என்றாலும், சில நேரங்களில் அப்பட்டமாக தவறு செய்ததும், கண்டுகொள்ளாமல் இருந்ததும் ரசிகர்களிடையேயும் வீரர்களிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு விவாதத்தையும் ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் - சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஒரு ஓவரில் 7 பந்துகள் வீசப்பட்டன. ஆனால் நடுவர்கள் கண்டுகொள்ளவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான  போட்டியின்போது, கேன் வில்லியம்சனுக்கு ஷர்துல் தாகூர் இடுப்புக்கும் மேல் பந்தை புல்டாஸாக வீசினார். அது அப்பட்டமாக நோ-பால் என்பது தெரிந்தது. ஆனால் நடுவர் நோ-பால் தரவில்லை. வில்லியம்சன், நடுவரிடம் கேட்க, நடுவர் வினீத் குல்கர்னி கண்டுகொள்ளவில்லை. அந்த போட்டியில் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோற்றது. ஒருவேளை அதற்கு நோ-பால் கொடுத்திருந்தால், போட்டியின் முடிவு மாறியிருக்க கூட வாய்ப்பிருக்கிறது. 

இன்னொரு போட்டியில் டிவி ரீப்ளேயில் உமேஷ் யாதவ் அவுட் ஆன பந்துக்கு நோ-பால் செக் செய்யும் போது அவர் ரன்னர் முனையில் இருந்தபோதான வேறொரு பும்ரா பந்து ரீப்ளே காட்டப்பட்டது.

பல வேளைகளில் பவுன்சர் தலைக்கும் மேல் செல்லும் போது ஒரு பவுன்சர் என்று அறிவிக்கப்படுவதில்லை. அகலப் பந்துகள் தொடர்பாகவும் பல சர்ச்சைகள் மூண்டு வருகின்றன.

இதனால் ஐபிஎல் போட்டிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதையடுத்து நடுவர்களுக்கு ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா பொறுப்புடன் நடுவர் பணியாற்றுமாறும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளதாக பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

click me!