சிறந்த சமயோசித கேப்டனாக வலம்வரும் தமிழன்!! தோனியை பின்னுக்கு தள்ளி அசத்திய அஸ்வின்

First Published Apr 24, 2018, 1:30 PM IST
Highlights
good captaincy of ashwin lead punjab team to continuous win


டெல்லியை வீழ்த்தி 5வது வெற்றியை பதிவுசெய்த பஞ்சாப் அணி, தோனி தலைமையிலான சென்னை அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நடந்த 10 சீசன்களிலும் சரியாக சோபிக்காத பஞ்சாப் அணி, இந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அதற்காக பஞ்சாப் அணியின் ஆலோசகரான சேவாக் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

சென்னை அணி தக்கவைக்க தவறிய அஸ்வினை ஏலத்தில் எடுத்து அவரையே கேப்டனாகவும் ஆக்கினார். அனைத்து அணிகளும் ஏலத்தில் புறக்கணித்த அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை சேவாக் ஏலத்தில் எடுத்தார்.

அஸ்வினை கேப்டனாக்கிய சேவாக்கின் நடவடிக்கை, அந்த அணிக்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்த தொடர் தொடங்கியதிலிருந்து அஸ்வின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது கேப்டன்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சோதனை முயற்சிகள், சமயோசித முடிவுகள், வியூகங்கள், பவுலர்களை பயன்படுத்தும் திறன் என அனைத்திலும் ஒரு கேப்டனாக அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றியை உறுதி செய்துவருகிறார். டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட, பவர்பிளேயில் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்திய அஸ்வின், சோதனை முயற்சியாக கடைசி ஓவரில் ஸ்பின் பவுலரான முஜீபுர் ரஹ்மானை பயன்படுத்தினார். அஸ்வினின் இந்த முயற்சி, நல்ல பலனையும் முடிவையும் தந்தது.

143 என்ற குறைந்த ரன்களை எடுத்திருந்தபோதும், 144 ரன்கள் என்ற எளிய இலக்கை டெல்லி அணியை எட்டவிடாமல், வெற்றியை பறித்தார் அஸ்வின். அதற்கு பவுலர்களை அவர் பயன்படுத்திய கேப்டன்சி திறன் தான் காரணம். கேப்டனாக அஸ்வின் சிறப்பாக செயல்படுகிறார்.

தோனியின் கேப்டன்சியின் கீழ் கடந்த 10 ஆண்டுகளாக ஆடிவந்த அஸ்வின், தோனியின் தலைமையிலான சென்னை அணியையே வீழ்த்தினார். நேற்றைய வெற்றியின் மூலம் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி.
 

click me!