
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் வீரர்களான முகமது நபி மற்றும் ரஷித் கான் ஏலத்தில் தேர்வாகியுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது.
பத்தாவது ஐபிஎல் சீசனுக்காக நடைபெறும் இந்த ஏலத்தில் 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதிலிருந்து அனைத்து அணிகளும் சேர்ந்து அதிகபட்சம் 76 வீரர்களை வாங்க முடியும்.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 27 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். அனைத்து அணிகளும் தலா 22 முதல் 24 வீரர்களை தங்கள் அணியில் வைத்துக் கொள்ளும் திட்டத்தில் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றன.
இந்த முறை வீரர்களுக்கான அடிப்படை விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இஷாந்த் சர்மா, இயான் மோர்கன், மிட்செல் ஜான்சன், பட் கம்மின்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஏஞ்செலோ மேத்யூஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் முறையே ரூ.23.35 கோடிக்கும், ரூ.23.10 கோடிக்கும் வீரர்களை வாங்கலாம். அதற்கடுத்தபடியாக ஹைதராபாத் அணி ரூ.20.9 கோடிக்கும், கொல்கத்தா அணி ரூ.19.75 கோடிக்கும், பெங்களூர் அணி ரூ.17.8 கோடிக்கும், புணே அணி ரூ.17.5 கோடிக்கும் வீரர்களை வாங்கலாம். குஜராத் அணி ரூ.14.35 கோடிக்கும், மும்பை அணி ரூ.11.55 கோடிக்கும் வீரர்களை வாங்கலாம்.
மொத்தத்தில் 8 அணிகளும் சேர்ந்து அதிகபட்சமாக ரூ.148 கோடிக்கு வீரர்களை வாங்கலாம்.
இந்நிலையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸை ரூ. 14.5 கோடிக்கு ஏலத்துக்கு எடுத்துள்ளது புணே அணி.
அதேபோல மார்கனை ரூ. 2 கோடிக்கு பஞ்சாப்பும் கூரே ஆண்டர்சனை ரூ. 1 கோடிக்கு தில்லியும் பவன் நெகியை ரூ. 1 கோடிக்கு பெங்களூரும் ஏஞ்சலோ மேத்யூஸை ரூ. 2 கோடிக்கு தில்லியும் ஏலத்தில் தேர்வு செய்துள்ளன.
விக்கெட் கீப்பர்களுக்கான ஏலத்தில் நிகோலஸ் பூரனை ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்தது மும்பை.
பந்துவீச்சாளர்களுக்கான ஏலத்தில் இங்கிலாந்து வீரர் டைமல் மில்ஸை ரூ. 12 கோடிக்குத் தேர்வு செய்து ஆச்சர்யப்படுத்தியது பெங்களூர் அணி. அவருடைய அடிப்படை விலையை விடவும் 24 மடங்கு அதிகமாக தேர்வாகியுள்ளார். ரபடாவை ரூ. 5 கோடிக்கு தில்லியும் ட்ரெண்ட் போல்ட்டை ரூ. 5 கோடிக்கு கொல்கத்தாவும் ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸை ரூ. 4.50 கோடிக்கு தில்லி அணியும் மிட்செல் ஜான்சனை ரூ. 2 கோடிக்கு மும்பை அணியும் தேர்வு செய்துள்ளன.
இஷாந்த் சர்மாவை யாரும் தேர்வு செய்யவில்லை.
மும்பை ரஞ்சி பேட்ஸ்மேன் பிரிதிவி ஷாவையும் யாரும் தேர்வு செய்யவில்லை.
தன்மே அகர்வாலை ரூ. 10 லட்சத்துக்கு ஹைதராபாத் தேர்வு செய்தது.
முகமது நபியை ரூ. 30 லட்சத்துக்கு ஹைதராபாத்தும் கே. கெளதமை ரூ. 2 கோடிக்கு மும்பையும் ராகுல் டெவாடியாவை ரூ. 25 லட்சத்துக்கு பஞ்சாப்பும் ஆதித்த தரேவை ரூ. 25 லட்சத்துக்கு தில்லியும் ஏக்லவ்யா திவேவ்தியை ரூ. 75 லட்சத்துக்கு ஹைதராபாத்தும் அனிகேத் செளத்ரியை ரூ. 2 கோடிக்கு பெங்களூருவும் தேர்வு செய்தன.
தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி.
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஏலத்தில் தேர்வாகியுள்ளார்கள்.
ஹைதராபாத் அணி முகமது நபியை ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. அதேபோல ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கானை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது ஹைதராபாத் அணி.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.