மிடில் ஆர்டர் மிரட்டலான பேட்டிங்.. கடைசி ஓவர்களில் காட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா!! நல்ல ஸ்கோரை எட்டிய இந்திய அணி

By karthikeyan VFirst Published Feb 3, 2019, 11:18 AM IST
Highlights

47வது ஓவரை நியூசிலாந்து ஸ்பின் பவுலர் ஆஸ்டில் வீசினார். அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார் ஹர்திக் பாண்டியா. அதற்கு அடுத்த 48வது ஓவரை டிரெண்ட் போல்ட் வீச, அந்த ஓவரிலும் ஒரு சிக்ஸரை விளாசினார் ஹர்திக்.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 4 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்ட நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தாலும் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியாலும் இந்திய அணி 2 ரன்களை எட்டியது. 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் நான்கு விக்கெட்டுகளை 18 ரன்களுக்கே இழந்துவிட்டது. ரோஹித் சர்மா(2), தவான்(6), ஷுப்மன் கில்(7), தோனி(1) என முதல் நான்கு விக்கெட்டுகளை 10 ஓவர்களில் மிகக்குறைந்த ரன்களுக்கே இழந்துவிட்டது. 

10 ஓவரில் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணியை ராயுடுவும் விஜய் சங்கரும் இணைந்து மீட்டெடுத்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக பேட்டிங் ஆடிய விஜய் சங்கர், அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 45 ரன்களில் ரன் அவுட்டானார். 

இதையடுத்து ராயுடுவுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த ராயுடு, அதன்பிறகு அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ராயுடுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய கேதர் ஜாதவும் அவ்வப்போது சில பவுண்டரிகளை அடித்தார். அரைசதத்துக்கு அதிரடியை கையில் எடுத்த ராயுடு, ஹென்ரி வீசிய 40வது ஓவரில் 2 சிக்ஸர்களையும் ஹென்ரி வீசிய 42வது ஓவரில் 2 பவுண்டரிகளையும் விளாசினார். மீண்டும் ஹென்ரி வீசிய 44வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ராயுடு, இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். 90 ரன்கள் அடித்த ராயுடு, சதத்தை தவறவிட்டார். 

பின்னர் கேதர் ஜாதவுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கேதர் ஜாதவ், 34 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார் ஹர்திக் பாண்டியா. கேதர் ஜாதவின் விக்கெட்டுக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவுடன் புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். 46வது ஓவரின் இரண்டாவது பந்தில் கேதர் ஜாதவ் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த 47வது ஓவரை நியூசிலாந்து ஸ்பின் பவுலர் ஆஸ்டில் வீசினார். அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார் ஹர்திக் பாண்டியா. அதற்கு அடுத்த 48வது ஓவரை டிரெண்ட் போல்ட் வீச, அந்த ஓவரிலும் ஒரு சிக்ஸரை விளாசினார் ஹர்திக். நீஷம் வீசிய 49வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்த ஹர்திக் பாண்டியா, அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 22 பந்துகளில் 45 ரன்களை குவித்து பாண்டியா ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் எஞ்சிய 2 விக்கெட்டுகள் விழுந்துவிட்டன. 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேர ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 252 ரன்களை எடுத்தது. 
 

click me!