அரைசதத்துக்கு பிறகு அடித்து நொறுக்கிய ராயுடு.. சதத்தை நெருங்கிய ராயுடுவுக்கு நேர்ந்த பரிதாபம்

By karthikeyan VFirst Published Feb 3, 2019, 10:40 AM IST
Highlights

முன்ரோ வீசிய 40வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசி மிரட்டினார் ராயுடு. ஹென்ரி வீசிய 42வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிய ராயுடு, 90 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டி வெலிங்டனில் இன்று காலை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் முதல் 4 விக்கெட்டுகள் விரைவாகவே விழுந்துவிட்டன. ரோஹித் சர்மா(2), தவான்(6), ஷுப்மன் கில்(7), தோனி(1) என 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. 

அதன்பிறகு ராயுடுவும் விஜய் சங்கரும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இருவரும் பொறுப்புடன் பேட்டிங் ஆடினர். ராயுடு - விஜய் சங்கர் ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து பவுலர்கள் திணறினர். போல்ட், ஹென்ரி, கோலின் டி கிராண்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், கோலின் முன்ரோ, சாண்ட்னெர் என மாறி மாறி பந்துவீசியும் அந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் அணியில் இருந்தும் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காத விஜய் சங்கருக்கு இந்த போட்டியில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தது. அதை நன்கு பயன்படுத்தி ஆடிய விஜய் சங்கர் 45 ரன்களில் ரன் அவுட்டாகி, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 

இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 98 ரன்களை சேர்த்தது. அதன்பிறகு ராயுடுவுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராயுடு, அரைசதம் அடித்த பிறகு அதிரடியாக ஆட தொடங்கினார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கேதர் ஜாதவும் சிறப்பாக ஆடினார். முன்ரோ வீசிய 40வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசி மிரட்டினார் ராயுடு. ஹென்ரி வீசிய 42வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். மீண்டும் ஹென்ரி வீசிய 44வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ராயுடு அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். 

அபாரமாக ஆடிய ராயுடு, 90 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். சதமடித்திருந்தால், டெத் ஓவர்களில் இன்னும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியிருப்பார். ஆனால் 90 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டார். இதையடுத்து கேதர் ஜாதவுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். 46வது ஓவரில் கேதர் ஜாதவும் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியாவுடன் புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்துள்ளார். 
 

click me!