ஆசிய கோப்பைக்கான இந்திய அணி!! யாருக்கு வாய்ப்பு..? யாருக்கு ஆப்பு..?

By karthikeyan VFirst Published Aug 31, 2018, 3:38 PM IST
Highlights

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்குகிறது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 1984ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 13 முறை ஆசிய கோப்பை தொடர் நடந்துள்ளது. அவற்றில் 6 முறை இந்திய அணியும் 5 முறை இலங்கை அணியும் 2 முறை பாகிஸ்தான் அணியும் கோப்பையை வென்றுள்ளன. 14வது தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி அண்மையில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடைகிறது. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என மொத்தம் 6 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம் பெறும். 

செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இலங்கையும் வங்கதேசமும் மோதுகின்றன. செப்டம்பர் 18ம் தேதி தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் இந்திய அணி, அதற்கு மறுநாளான 19ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்திய அணி ஆட உள்ளது. ஓய்வு இல்லாமல் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் ஆடும் வகையில் அட்டவணை உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் அந்த அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் ஆசிய கோப்பையில் இந்திய அணி ஆடுகிறது. ஆசிய கோப்பை தொடருக்கான அணி தேர்வு மும்பையில் நாளை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் நடைபெறுகிறது. பிசிசிஐ அலுவலகத்தில் நாளை இந்த வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. 

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில், யோ யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டு பின்னர் யோ யோ டெஸ்டில் தேர்வான அம்பாதி ராயுடுவிற்கு வாய்ப்பளிக்கப்படும் என கருதப்படுகிறது. அதேபோல தொடர்ந்து திறமையை நிரூபித்துவரும் பிரித்வி ஷா, மயன்க் அகர்வால் மற்றும் நான்கு அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிறப்பாக ஆடிய மனீஷ் பாண்டே ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் அணியின் தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!