இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இன்று தொடக்கம்; முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- கேரளா அணிகள் மோதல்...

First Published Nov 17, 2017, 10:29 AM IST
Highlights
Indian Super League football tournament starts today Calcutta-Kerala teams clash in first match


இன்று கேரள மாநிலம் கொச்சியில் தொடங்கும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி நான்காவது சீசனின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் சமீபத்தில் 17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவடைந்த நிலையில் அடுத்த கால்பந்து போட்டிகள் தொடங்குகிறது.

ஐஎஸ்எல் போட்டியின் நடப்பு சீசனில் பெங்களூரு எஃப்சி, ஜாம்ஷெட் பூர் எஃப்சி ஆகிய இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பெங்களூரு அணி ஐ-லீக் உள்ளிட்ட கால்பந்து போட்டிகளில் ஏற்கெனவே தடம் பதித்துள்ள நிலையில், தற்போது ஐஎஸ்எல் போட்டியில் களம் காண்கிறது.

ஜாம்ஷெட்பூர் இந்த கால்பந்து களத்துக்கு புதிய அணியாகும். இரு புதிய அணிகளின் இணைப்பால் லீக் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இந்த சீசன் ஐஎஸ்எல் போட்டி 4 மாதங்களுக்கு நீடிக்க உள்ளது.

இதனிடையே, இந்த சீசனில் வெற்றி பெறும் அணி ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும்.

இந்த சீசனில் புதிய மாற்றமாக பிரதான வீரர் ஒருவரை அணிகள் கண்டிப்பாக ஒப்பந்தம் செய்ய வேண்டிய முறை நீக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே சர்வதேச அளவில் பிரபல வீரர்களான அலெஸான்ட்ரோ டெல் பியரோ, மார்கோ மெட்டாரஸி, ராபர்டோ கார்லோஸ் போன்றவர்கள் ஐஎஸ்எல் போட்டிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அணியிலும் பிளேயிங் லெவனில் 6 இந்திய வீரர்கள் களத்தில் இருக்க வேண்டும் என்ற விதி புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று மற்ற அணிகளின் பயிற்சியாளர்களும் வரவேற்பு அளித்துள்ளனர்.

tags
click me!