ரோஹித், தவான் நீக்கம்.. முச்சத நாயகனும் புறக்கணிப்பு!! பிசிசிஐ அதிரடியால் ரசிகர்கள் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Sep 30, 2018, 10:09 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, தவான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 
 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, தவான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 4ம் தேதி(வியாழக்கிழமை) ராஜ்கோட்டில் தொடங்குகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அடுத்து வரும் நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆட உள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மனதில் வைத்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு நடைபெறும் என கூறப்பட்டது.

இந்நிலையில், இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான குழு நேற்று வீரர்களை தேர்வு செய்து அறிவித்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த அஷ்வின் குணமடைந்துவிட்டதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். விராட் கோலியும் காயத்திலிருந்து குணமடைந்து விட்டதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் காயத்திலிருந்து குணமடையாத இஷாந்த் சர்மா அணியில் இல்லை. 

புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விதமாக அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மனதில் வைத்து இந்த அணி தேர்வு செய்யப்பட்டிருப்பதால் வெளிநாடுகளில் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிவந்த ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்படவில்லை. 

ரோஹித் சர்மாவும் அணியில் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே ரோஹித் ஆட விருப்பம் தெரிவித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ராகுலும் தவானும் சரியாக ஆடாததால், டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித்தை ஓபனராக முயற்சிக்கலாம் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் ரோஹித்துக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ரோஹித் மற்றும் தவானுக்கு பதிலாக இளம் வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் மயன்க் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹனுமா விஹாரியும் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் இங்கிலாந்து தொடரில் சொதப்பியதால் அவருக்கும் இடம் வழங்கப்படவில்லை. விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தொடரில் அணியில் சேர்க்கப்பட்டு, ஆனால் ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு வழங்கப்படாத கருண் நாயர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சேர்க்கப்படவில்லை. இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கருண் நாயரை வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவே இச்செயல் பார்க்கப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), அஜிங்கியா ரஹானே(துணை கேப்டன்), கேஎல் ராகுல், பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்
 

click me!