2011-ல் இருந்தே எனக்கு அந்த பிரச்னை இருக்கு!! ஆனால் அதுக்குலாம் நான் அசந்ததே இல்ல.. வலியை பகிர்ந்த கோலி

By karthikeyan VFirst Published Jan 2, 2019, 2:51 PM IST
Highlights

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது உடற்தகுதி மற்றும் தனது பிரச்னை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 
 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது உடற்தகுதி மற்றும் தனது பிரச்னை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 

இதுவரை ஒருமுறை கூட ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணிக்கு இம்முறை தொடரை வென்று வரலாறு படைக்க அரிய சாதனை கிடைத்துள்ளது. முதல் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. 

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 அணியாக இருந்தும் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. இந்த தோல்விகள் அணி மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. 

எனவே ஆஸ்திரேலிய தொடரை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றது. ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் அந்த அணியில் இல்லாததுடன் இந்திய அணி மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றிருப்பது கூடுதல் பலமாக அமைந்தது. மூன்று போட்டிகளில் இரண்டில் வென்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

 

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பிவருகின்றனர். புஜாராவும் கோலியும் மட்டும்தான் நம்பிக்கை அளிக்கின்றனர். இதற்கிடையே கோலியும் அவ்வப்போது முதுகுவலியால் அவதிப்பட்டுவருகிறார். இது இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் முதுகுவலியால் பாதியில் களத்திலிருந்து வெளியேறினார் கோலி.

அதேபோலவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டிலும் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது முதுகுவலியால் அவதிப்பட்டார் கோலி. முதுகுவலி வந்த சிறிது நேரத்திலேயே 82 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். எனவே கோலி அவுட்டானதற்கு முதுகுவலியும் ஒரு காரணமாக இருக்கலாம். உடலளவில் மிகவும் ஃபிட்டான வீரர் கோலி. ஆனால் கோலிக்கே இப்படியொரு பிரச்னை அவ்வப்போது தலைதூக்குவது சற்று சோகமான சம்பவம்தான். 

ஆனால் அதை கோலி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தனக்கு இருக்கும் முதுகு பிரச்னை குறித்து பேசியுள்ள கோலி, 2011ம் ஆண்டில் இருந்தே எனக்கு இந்த பிரச்னை இருக்கிறது. ஆனால் உடற்தகுதி நிபுணரின் ஆலோசனையின் பேரில் முறையான பயிற்சிகளின் வாயிலாக அதை சமாளித்து வருகிறேன். விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். அதனால் இதையெல்லாம் நான் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. முதுகு பிரச்னை பெரிதாக ஆகாத அளவிற்கு அதை தகுந்த பயிற்சிகளின் வாயிலாக பராமரித்து வருகிறேன். எனது கவனம் முழுவதும் எப்போதுமே அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றிகளை பெறுவதில்தான் உள்ளதே தவிர இதுபோன்ற விஷயங்களை பற்றி கவலைப்பட்டதில்லை என்று கோலி தெரிவித்துள்ளார். 
 

click me!