
மலேசியாவில் நடந்து வரும் 4-வது ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு இந்திய ஆடவர் அணி தகுதிபெற்றுள்ளது.
4-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் ஜப்பானை 10-2 என்ற கோல்கணக்கிலும், தென்கொரியா அணியுடன் 1-1 என்ற கோல்கணக்கில் டிரா செய்தது.
இந்நிலையில், 3-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இன்று எதிர்கொண்டது இந்திய அணி. ஏற்கனவே இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழலில் இந்த ஆட்டம் நடந்ததால், இரு நாட்டு ரசிகர்களும் தங்கள் நாட்டு அணிக்கு பெரும் ஆதரவு அளித்தனர். முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்க வில்லை.
2-வது பாதியில் ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் இந்திய வீரர் பிரதீப் மோர் அருமையான கோல் அடித்து இந்திய அணியை 1-0 என்று முன்னிலைப்படுத்தினார்.
இதற்கு பதிலடி கொடுக்க முனைந்த பாகிஸ்தான் அணி 3-வது பாதியின் 31 நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணி வீரர் முகமது ரிஸ்வான் கோல் அடித்து சமன் செய்தார். அடுத்த 8 நிமிடங்களில் மீண்டும் பாகிஸ்தான் அணி வீரர் முகமது இப்ரான் கோல் அடித்து 2-1 என முன்னிலைப்படுத்தினார்.
அதன்பின் இந்திய வீரர்களின் துடிப்பான ஆட்டத்தால் 43-வது நிமிடத்தில் ரூபேந்திரபால் சிங் கோல் அடித்து 2-2 என்ற சமன் செய்தார். இதனால், ஆட்டம் டிராவைநோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அடுத்த நிமிடத்தில் ராமன் தீப்சிங் கோல் அடித்து 3-2 என இந்திய அணியை முன்னெடுத்தார். அதன்பின் இந்திய அணியின் தடுப்பாட்டத்தின் முன் பாகிஸ்தான் வீரர்களின் முயற்சி பலிக்கவில்லை. ஆட்டமுடிவு வரை இந்தியாவின் கோல் கணக்கை சமன் செய்யமுடியாததையடுத்து பாகிஸ்தான் 2-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.