37 ஆண்டுக்குப் பின் வரலாற்று வெற்றி பெற்ற இந்தியா!! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Dec 30, 2018, 8:30 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2-1 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2-1 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, புஜாராவின் சதம் மற்றும் மயன்க், கோலி, ரோஹித் சர்மாவின் அரைசதத்தால் இந்திய அணி 443 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி பும்ராவின் வேகத்தில் சரிந்தது. முதல் இன்னிங்ஸில் வெறும் 151 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது.

292 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. முதல் இன்னிங்ஸிற்கு எதிர்மாறாக பேட்டிங் ஆடியது. 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

399 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் ஃபின்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன், ஸ்டார்க் ஆகிய 8 விக்கெட்டுகளை 215 ரன்களுக்கு இழந்துவிட்டது. ஆனால் பாட் கம்மின்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் பாட் கம்மின்ஸ் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அதேநேரத்தில் ரன்களையும் சேர்த்தார். கம்மின்ஸுடன் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நாதன் லயன் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பொறுப்புடன் தெளிவாக ஆடிய கம்மின்ஸ் அரைசதம் அடித்தார். பவுலிங்கில் அசத்தி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய கம்மின்ஸ், பேட்டிங்கிலும் அருமையாக செயல்பட்டு அரைசதம் அடித்தார். 

நான்காம் நாளான நேற்றைய ஆட்டம் முடிந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பதால் நேற்றே போட்டியை முடிக்கும் விதமாக கூடுதலாக 5 ஓவர்கள் வீச அனுமதிக்கப்பட்டனர். எனினும் இந்திய பவுலர்களால் கம்மின்ஸ் - லயன் ஜோடியை பிரிக்க முடியவில்லை.

இதையடுத்து ஆட்டத்தின் கடைசி நாளான இன்றுகாலை 5 மணிக்கு ஆட்டம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் மழை பெய்ததால் ஆட்டம் ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. மழை பெய்து வந்ததால் உணவு இடைவேளை அரைமணி நேரம் முன்னதாகவே விடப்பட்டு, பின்னர் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கப்பட்டது. 

இன்றைய ஆட்டம் தொடங்கிய 4வது ஓவரிலேயே கம்மின்ஸின் விக்கெட்டை வீழ்த்தி பும்ரா பிரேக் கொடுத்தார். இதையடுத்து அடுத்த ஓவரிலேயே நாதன் லயனின் விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி 261 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1981ம் ஆண்டுக்கு அடுத்து 37 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்திய அணி மெல்போர்னில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பும்ராவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. கடைசி போட்டி ஜனவரி 3ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. 

click me!