சாதனைகளை குவிக்க இவங்கதான் சரியான ஆளு!! வெஸ்ட் இண்டீஸை வச்சு செஞ்சுவிட்ட இந்தியா

By karthikeyan VFirst Published Nov 2, 2018, 10:04 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பல சாதனைகளுடன் இந்திய அணி வென்றுள்ளது. 
 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பல சாதனைகளுடன் இந்திய அணி வென்றுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என வென்றுள்ளது. இந்த தொடரில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் ஏராளம். முதல் போட்டியில் கோலி - ரோஹித் பார்ட்னர்ஷிப்பில் தொடங்கி கோலியின் 10,000 ரன்கள், பார்ட்னர்ஷிப் ஸ்கோர், ரோஹித் சர்மாவின் சிக்ஸர்கள் சாதனை என சாதனைகளை இந்திய வீரர்கள் குவித்துவிட்டனர். 

இது ஒருபுறமிருக்க, இந்திய அணி மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இளம் வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் மூன்று போட்டிகளில் நன்றாகத்தான் ஆடியது. ஆனால் நான்கு மற்றும் ஐந்தாவது போட்டிகளில் மொத்தமாக சொதப்பிவிட்டது. 

நான்காவது போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற மூன்றாவது பெரிய வெற்றி இதுதான். அதற்கு முன்னதாக 2007ம் ஆண்டு பெர்முடா அணிக்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்திலும் 2008ம் ஆண்டு ஹாங்காங் அணிக்கு எதிராக 256 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

நான்காவது ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 15 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 105 ரன்கள் என்ற இலக்கை 15வது ஓவரிலேயே எட்டிய இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி வெற்றி பெற்ற பிறகும் 211 பந்துகள் எஞ்சியிருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது பேட்டிங்கில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றி இது. இதற்கு முன்னதாக 2001ம் ஆண்டு கென்யாவை 231 பந்துகள் எஞ்சியிருக்க, 12வது ஓவரிலேயே இலக்கை எட்டி இந்தியா பெற்ற வெற்றிதான் இலக்கை விரட்டியதில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. 

இவ்வாறு முதல் பேட்டிங் மற்றும் இரண்டாவது பேட்டிங் ஆகிய இரண்டிலுமே மிகப்பெரிய வெற்றிகளை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்திய அணி பெற்றுள்ளது. 

மேலும் இந்த தொடரை வென்றதன் மூலம் தொடர்ந்து 8வது முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒருநாள் தொடரில் வீழ்த்தியுள்ளது இந்திய அணி. கடந்த 2007ம் ஆண்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்த அனைத்து ஒருநாள் தொடர்களையும் இந்திய அணி வென்றுள்ளது. 
 

click me!