மொத்த போட்டியே 47 ஓவரில் முடிஞ்சு போச்சு!! 15 ஓவரில் இலக்கை எட்டி இந்தியா அபார வெற்றி.. தொடரை வென்றது இந்தியா

By karthikeyan VFirst Published Nov 1, 2018, 5:18 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்திய அணி ஒருநாள் தொடரை 3-1 என வென்றது. 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்திய அணி ஒருநாள் தொடரை 3-1 என வென்றது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக கிரன் பவலும் ரோமன் பவலும் களமிறங்கினர். 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சியளித்தனர். முதல் ஓவரில் கிரன் பவலை புவனேஷ்வர் குமாரும் இரண்டாவது ஓவரில் ஷாய் ஹோப்பை பும்ராவும் டக் அவுட்டாக்கி அனுப்பினர். 

கலீல் அகமதுவின் பவுலிங்கில் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி, ரோமன் பவலுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற அனுபவ வீரர் சாமுவேல்ஸை 24 ரன்களில் ஜடேஜா வீழ்த்தினார். இதையடுத்து அந்த அணியின் இளம் அதிரடி வீரர் ஹெட்மயரின் விக்கெட்டையும் ஜடேஜா வீழ்த்தினார். இதையடுத்து ரோமன் பவல், ஃபேபியன் ஆலென், ஜேசன் ஹோல்டர் என அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 32 ஓவரில் வெறும் 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

105 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், 6 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். வழக்கம்போலவே தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ரோஹித், ஒரு சில ஓவர்களை ஆடியபிறகு, அடித்து ஆட தொடங்கினார். 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். கோலி 33 ரன்களுடன் களத்தில் இருந்தார். 14.5 ஓவரிலேயே இலக்கை எட்டி இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் 32 ஓவர் மற்றும் இந்தியாவின் இன்னிங்ஸ் 15 ஓவர் என மொத்த போட்டியும் 47 ஓவர்களில் முடிந்துவிட்டது. இரவு 9.30 மணிக்கு முடியவேண்டிய போட்டி, 5 மணிக்கே முடிந்துவிட்டது. 

இந்த வெற்றியின் மூலம் 3-1 என இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றது. 
 

click me!